search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாம்பரம், குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி பகுதிகளில் மத்தியக் குழு 2-வது நாளாக ஆய்வு
    X

    வடசென்னை பகுதிக்குட்பட்ட கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மத்தியக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்ததை படத்தில் காணலாம்.

    தாம்பரம், குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி பகுதிகளில் மத்தியக் குழு 2-வது நாளாக ஆய்வு

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை சந்தித்து பேசி விட்டு அதன் பிறகு மத்தியக் குழுவினர் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.
    • வெள்ள சேத மதிப்பு விவரங்களை விரிவாக தயாரித்து மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள்.

    சென்னை:

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிச்சாங் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்திருந்தனர்.

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (என்.டி.எம்.ஏ.) ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில் திமான்சிங், வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை இணை இயக்குனர் ஏ.கே.சிவ்ஹரே, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விஜயகுமார், நிதித்துறை சார்பில் ரங்கநாத் ஆடம், மின்சாரத்துறை துணை இயக்குனர் பவ்யா பாண்டே ஆகிய 6 பேர் வந்திருந்தனர்.

    அவர்கள் நேற்று காலை தலைமைச் செயலகம் சென்று தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்திய பிறகு தென்சென்னைக்கு ஒரு குழுவும், வடசென்னை பகுதிக்கு மற்றொரு குழுவினரும் சென்று பார்வையிட்டனர்.

    பட்டாளம், புளியந்தோப்பு, மணலி, வியாசர்பாடி, கணேசபுரம், வடபெரும்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளை பார்வையிட்டனர்.

    இன்று 2-வது நாளாக மத்திய குழுவினர் இடம்பெற்றிருந்த சிவ்கரே, விஜயகுமார், பவ்யா பாண்டே ஆகியோர் நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரி அருகே உள்ள கழிவுநீரகற்று பம்பிங் ஸ்டேஷன் கீழ்ப்பாக்கம் குடிநீர் நீரேற்று நிலையம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர்.

    இதனை தொடர்ந்து வில்லிவாக்கம் அம்பேத்கர் நகர், சிட்கோ நகர், அம்பத்தூர் எஸ்டேட் சிட்கோ தொழிற்பேட்டை பகுதிகளை பார்வையிடுகின்றனர். அதன் பிறகு பாடி, கொரட்டூர் பகுதிகளுக்கு சென்று வெள்ள சேத பகுதிகளை பார்க்கின்றனர்.

    கொரட்டூரில் மழை நீர் புகுந்த வீடுகளை பார்த்ததுடன் வடக்கு அவென்யூ ரோடு, பம்பிங் ஸ்டேஷன், ஏரிக்கரை பகுதிகளுக்கும் சென்றும் பார்வையிடுகின்றனர். அவர்களுக்கு மாநகராட்சி உயர் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

    இதே போல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெள்ள சேதங்களை மறறொரு குழுவில் இடம் பெற்றிருந்த குணால் சத்யார்த்தி, திமான்சிங், ரங்கநாத் ஆகியோர் அடங்கிய குழுவினர் முதலில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர், நன்மங்கலம் ஏரி, சமத்துவ பெரியார் நகர், மூவேந்தர் நகர், பாரதியார் நகர், குட்வில் நகர் பகுதிகளை பார்வையிட்டனர்.

    இடுப்பளவு தண்ணீரில் மூழ்கிய வரதராஜபுரம்-ராயப்பா நகர், மகாலட்சுமி நகர் பாலம், தாம்பரம்-முடிச்சூர் ஸ்ரீபெரும்புதூர் சாலை ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.

    இன்று மதியம் குன்றத்தூர் வேல்நகர், பிரிதிவிநகர், செம்பரம்பாக்கம் அமரம்பேடு, மாதா கல்லூரி அருகே உள்ள பகுதிகள், பூந்தமல்லி நசரத்பேட்டை, அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய பகுதி, திருவேற்காடு, ஐ.சி.எப். காலனி, நூம்பல், முகவலிவாக்கம் திருவள்ளூர் நகர், மணப்பாக்கம் முகலிவாக்கம் சாலை, பெல்நகர் காவ்யா கார்டன், ராமமூர்த்தி அவென்யூ ஆகிய பகுதிகளுக்கும் சென்று பார்வையிட உள்ளனர்.

    இதே போல் மற்றொரு குழுவினர் புழல் ஏரி, சோழவரம் ஏரி, ஆவடி வீட்டு வசதி வாரியம், பருத்திப்பட்டு, பொன்னேரி, திருவேற்காடு, பஞ்செட்டி சாலை, சுப்பாரெட்டி பாளையம், அத்திப்பட்டு, புதூர் நகர், தட்டமஞ்சி, தச்சூர், அத்திப்பட்டு அனுபம்பட்டு, கொசஸ்தலை ஆறு பகுதிகள், சோமஞ்சேரி, பிரளயம்பாக்கம், ஆரணியாறு, பழவேற்காடு புலிகாட் ஆகிய இடங்களை பார்வையிட உள்ளனர்.

    இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை (வியாழக்கிழமை) சந்தித்து பேசி விட்டு அதன் பிறகு டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். பின்னர் வெள்ள சேத மதிப்பு விவரங்களை விரிவாக தயாரித்து மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள்.

    Next Story
    ×