search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போதை பொருள் விற்றால் கடும் நடவடிக்கை எடுங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    போதை பொருள் விற்றால் கடும் நடவடிக்கை எடுங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    • போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளை போலீசார் கைது செய்ய வேண்டும்.
    • போதைப்பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

    ஆனாலும் கஞ்சா, பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பக்கத்து மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து ஒவ்வொரு பகுதியிலும் சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.

    போலீசார் அவ்வப்போது அத்தகைய நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் மீண்டும் மீண்டும் போதை பொருட்கள் நடமாட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ஆட்சி பொறுப்பேற்றது முதற்கொண்டு போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். அதன் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஆனாலும் போதை பொருட்கள் விற்பனை சில பகுதிகளில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    இதனால் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தனியாக மாவட்ட கலெக்டர்கள்-போலீஸ் சூப்பிரண்டுகள் கூட்டத்தை நடத்தி தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க முடிவு செய்தார்.

    இதையொட்டி அனைத்து மாவட்ட கலெக்டர்கள்-போலீஸ் சூப்பிரண்டுகள் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

    கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    கூட்டத்திற்கு வந்திருந்த அதிகாரிகள் அனைவரையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக போதை பொருட்கள் உள்ளது. போதை பாதை அழிவுப் பாதை என்பதை நாடும், நாட்டு மக்களும் அறிவார்கள். தற்செயலாகவோ, தவறுதலாகவோ அதனை பயன்படுத்துபவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி மொத்தமாக அதனுள் மூழ்கி விடுகிறார்கள்.

    இது அவர்களது சிந்தனையை அழித்து விடுகிறது. வளர்ச்சியை தடுத்து விடுகிறது. எதிர்காலத்தை பாழாக்கி அவர்களது குடும்பத்தையும் அழித்து விடுகிறது. இது சமுதாயத்தின்-நாட்டின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கிறது.

    போதை பொருளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் நாளுக்கு நாள் பேதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு சம்பந்தமாக இதுவரை கூட்டம் கூட்டி உள்ளோம். இப்போது முதன் முறையாக போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க கூட்டம் கூட்டி உள்ளோம்.

    போதைப் பொருள் ஒழிப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்தாக வேண்டும்.

    போதை பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டும். விற்பனையை தடுக்க வேண்டும். அதை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.

    போதை பொருள் பயன்படுத்துபவர்களை போதையின் பாதையில் செல்லாமல் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. எனவே போதை பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். இதற்கு நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    போதை பொருள் நடமாட்டத்தில் குஜராத்தை விட மகாராஷ்ராவை விட தமிழ்நாட்டில் குறைவுதான் என்று சொல்வதில் நான் சமாதானம் அடைய தயாராக இல்லை.

    உடலுக்கு கெடுதியானது போதைப்பொருள். அதனால் கெடுதல் என்ற பொருளில் நான் சொல்கிறேன். போதை என்பது தனிமனித பிரச்சினை அல்ல. சமூக பிரச்சினை. இதை தடுத்தாக வேண்டும். போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டும்.

    போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளை போலீசார் கைது செய்ய வேண்டும். போதைப்பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும். ஒருசேர சமூகம் இயங்கினால்தான் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக தமிழகம் செயல்பட முடியும்.

    எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க நீங்கள் பாடுபட வேண்டும்.

    ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வந்தாலும் இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுங்கள்.

    போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்து மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

    இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 11-ந்தேதி போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக தேர்ந்தெடுத்து உள்ளோம்.

    அதன்படி தமிழ்நாடு முழுவதும் நாளை (11-ந்தேதி) பள்ளி, கல்லூரிகளில் இது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போதையின் தீமைகள் குறித்த காணொலி காட்சிகளும் திரையிடப்பட உள்ளது.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை இளைய சமுதாயத்தினரிடம் முழுமையாக கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளின் கருத்துக்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    Next Story
    ×