search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தமிழகத்துக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனம் இல்லை... மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    தமிழகத்துக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனம் இல்லை... மு.க.ஸ்டாலின் பேச்சு

    • மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
    • மக்களாகிய நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள். இதுதான் எங்களுடைய வெற்றியின் ரகசியம்.

    தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் ஊராட்சி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடங்கி வைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று மக்களை நான் நேரடியாக சந்தித்தேன். அந்த நிகழ்ச்சிக்கு 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்று பெயர் வைத்தோம். கொளத்தூர் மட்டுமல்ல, அதாவது என்னுடைய தொகுதி கொளத்தூர் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து தொகுதிகளும் என்னுடைய தொகுதிகள் தான் என்ற எண்ணத்துடன் அந்த பயணத்தை தொடங்கினேன். மேடையில் எனக்கு அருகில் ஒரு பெரிய பெட்டி வைத்து, அதில், பொதுமக்கள் தங்களுடைய தொகுதிக்கான தேவைகளை, கோரிக்கைகளை எழுதி போட வைத்தோம்.

    ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் அதில் சாத்தியமாக இருக்கக்கூடிய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி காட்டுவேன் என்று சொன்னேன்.

    ஆட்சிக்கு வந்ததும், உங்களுடைய மனுக்களை கவனிப்பதற்காகவே புதியதாக ஒரு துறையை உருவாக்கினேன். அந்த துறையின் பெயர் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்னிடம் கொடுக்கப்பட்ட மனுக்களை துறைவாரியாக பிரித்தோம். அதிலிருந்து, நடைமுறை சாத்தியம் உள்ள 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டோம். மக்கள் வைத்த கோரிக்கைகளில் சாத்தியம் உள்ள அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். தேர்தலுக்கு முன்னால் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டவுடன், எங்களுடைய கடமை முடிந்துவிட்டது என்று நாங்கள் நினைக்கவில்லை. இனிமேல்தான், கடமை தொடங்குகிறது என்று நினைத்து, உழைப்பைக் கொடுத்தோம். அதனால்தான், தொடர்ந்து மனுக்களை பெற்றோம். அதை முறைப்படுத்தினோம். எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, "முதல்வரின் முகவரி" என்று புதியதாக ஒரு துறையை உருவாக்கினோம்.

    மக்களால் தரப்படும் எல்லா மனுக்களையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வந்தோம். அனைத்து மக்களின் கோரிக்கைகளும் தலைமைச் செயலகத்திற்கு வந்துவிடுகிறது.

    நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், முதல்வரின் முகவரி துறையின்கீழ் தற்போது வரைக்கும் பெறப்பட்ட, 68 லட்சத்து 30 ஆயிரத்து 281 மனுக்களில் 66 லட்சத்து 25 ஆயிரத்து 304 மனுக்களுக்கு உரிய முறையில் தீர்வு கண்டிருக்கிறோம். அதிலும், இந்த தருமபுரி மாவட்டத்தில் மட்டும், 72 ஆயிரத்து 438 மனுக்களுக்கு சாதகமான முறையில் தீர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

    30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் உருவானதுதான் இந்த மக்களுடன் முதல்வர் திட்டம்.

    முதற்கட்டமாக, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியிருக்கும் கிராம ஊராட்சிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம்கள் வாயிலாகப் பெறப்பட்ட சுமார் 8 லட்சத்து 74 ஆயிரம் மனுக்களுக்கு இதுவரைக்கும் தீர்வு கண்டிருக்கிறோம். இந்த தருமபுரி மாவட்டத்தில் நகரப் பகுதிகளில், 3 ஆயிரத்து 107 மனுக்கள் பெறப்பட்டு, 30 நாட்களில் 1,868 மனுக்களுக்கு சாதகமான முறையில் தீர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

    ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

    எடுத்துக்காட்டாக, உங்களிடம் ஒன்றிரண்டு கடிதத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பூரணி என்பவர், தன்னுடைய வீட்டு வாசல் முன்பு கழிவுநீர் தேங்குவது தொடர்பாக எழுதியிருந்த மனுவுக்கு, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் தீர்வு கண்டோம். அதற்கு நன்றி தெரிவித்து அவர்கள் எழுதிய கடிதத்தில், என்ன சொல்லியிருந்தார்கள் என்றால், இதய நோயாளியான அவர்களுக்கு தேவையான மருந்துகள், அரசு மருத்துவமனையிலேயே கிடைத்து விடுவதாகவும், ஆனால், ஒரே ஒரு மாத்திரையை மட்டும் வெளியே வாங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் சொல்லியிருந்தார். அந்த மாத்திரையின் விலை, ஒரு அட்டை 215 ரூபாய். ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரை என்று, ஒரு மாதத்திற்கு 60 மாத்திரை சாப்பிடவேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் இதற்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும், கடந்த எட்டு மாதமாக, இந்தத் தொகையில்தான் மருந்து வாங்குவதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் சொல்லியிருந்தார்.

    அடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீனி வேதமுத்து என்பவர் எழுதிய கடிதத்தில், கடந்த இருபது ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் இருந்த கைலாசபுரம் செட்டியூரனி சாலையை சீரமைத்து கொடுத்ததற்கு நன்றி சொல்லியிருந்தார்.

    பொதுமக்களின் தனிப்பட்ட கோரிக்கைகளையும் கேட்டு, செயல்படுத்தி கொடுப்பது மூலமாக, எல்லோரும் மனநிறைவு அடையும் ஆட்சியாக நம்முடைய கழக அரசு செயல்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக ஒவ்வொரு வீட்டிற்கும், ஏதாவது ஒரு பயன்கிடைக்க அதில் அவர்கள் பயனடைந்து கொண்டு வருகிறார்கள். அதேபோன்று 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் மூலமாக 'யாருக்கும் எந்தக் குறையும் இல்லை' என்ற நிலையை உருவாக்க நாங்கள் இப்போது பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

    இப்படி மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. அதனால்தான், அவதூறுகள் பொய்ப் பிரச்சாரங்கள் மூலமாக இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைக்கிறார்கள். வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்து மக்களுக்குமான அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம். ஆனால், இதே பெருந்தன்மையை மற்றவர்களிடம் பார்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் தொடர் தோல்வி, படுதோல்வி அடைந்த பிறகும் அதிலிருந்து மத்திய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் மெட்ரோ ரெயில் போன்ற திட்டங்களுக்கு கூட நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை. நல்ல குணமில்லை. பாடம் கற்றுக்கொள்வதற்கு நினைப்பும் இல்லை. தங்களின் பத்து வருட காலத்தில் தமிழ்நாட்டில் எந்த ஒரு பெரிய திட்டமும் செய்யவில்லை.

    ஒன்றிய அரசு என்பது, விருப்பு வெறுப்புகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாக செயல்பட வேண்டும் என்பதை இனியாவது அவர்கள் உணர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்

    தி.மு.க.வைப் பொருத்தவரைக்கும் நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். மக்களாகிய நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள். இதுதான் எங்களுடைய வெற்றியின் ரகசியம். இதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ரகசியம். மக்களுக்கு உண்மையாக இருந்து, உண்மையான வளர்ச்சியை உருவாக்குவோம். இந்தியாவின் முதன்மை மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாட்டை உன்னதமான சிறந்த மாநிலமாக உருவாக்கிக் காட்டுவோம்,

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    Next Story
    ×