search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் மத்திய மந்திரிக்கு கடிதம்
    X

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் மத்திய மந்திரிக்கு கடிதம்

    • மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போதைய நீர் இருப்பு, 20 நாட்கள் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படும்.
    • நியாயமான நீர் மேலாண்மை மூலம் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

    சென்னை:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று காலையில் டெல்லியில் உள்ள வீட்டில் சந்தித்து பேசினார். அவருடன் துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென்றிருந்தார்.

    காவிரியில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் மத்திய மந்திரியிடம் வழங்கினார். அந்த கடிதத்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் எழுதி இருப்பதாவது:-

    காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி முக்கியமாக உள்ள நிலையில், இந்த ஆண்டு குறுவை சாகுபடியை விவசாயிகள் உரிய நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. 2018 பிப்ரவரி 16-ம் நாளிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர அட்டவணையின்படி, நீர் சேமிப்பு மற்றும் பிலிகுண்டுலுவில் அடையப்பட வேண்டிய நீரோட்டத்தைக் கருத்தில் கொண்டு இது செய்யப்பட்டது.

    இருப்பினும், ஜூன் 1 முதல் ஜூலை 17 வரை பிலிகுண்டுலுவில் பெறப்பட்ட நீர் இருப்பு 3.78 டி.எம்.சி மட்டுமே இந்தக் காலகட்டத்தில் பெறவேண்டிய தண்ணீர் அளவு 26.32 டி.எம்.சி. என உள்ள நிலையில், 22.54 டி.எம்.சி., நீர் பற்றாக்குறையாக உள்ளது. பிலிகுண்டுலுவில் இந்த 3.78 டி.எம்.சி நீர்வரத்துகூட கே.ஆர்.எஸ் மற்றும் கபினி நீர்த்தேக்கங்களுக்கு கீழே, கட்டுப்பாடற்ற இடைநிலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பிலிகுண்டுலு வரை பாய்கிறது.

    தென்மேற்கு பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், ஜூலை மாதத்தில் மழை வேகமெடுத்துள்ள நிலையில், 2 அணைகளில் இருந்தும் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போதைய நீர் இருப்பு, 20 நாட்கள் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படும்.

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடி, மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரை மட்டுமே நம்பியுள்ளதாகவும், குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து ஆரம்பத்தில் வினாடிக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அது 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    எனவே, நியாயமான நீர் மேலாண்மை மூலம் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. தண்ணீர் தேவைக்கும், நீர்வரத்திற்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமாக இருப்பதால், கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டுதான் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்திட இயலும்.

    தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் கடந்த 5.7.2023 அன்று ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து, இந்த முக்கியமான பிரச்சனையில் தலையிட்டு, தண்ணீர்ப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கர்நாடகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டிருந்தார்.

    3.7.2023 தேதியிட்ட கடிதத்தின்படி, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களிலும் இந்தப் பிரச்சினையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்துச் சென்றதாகவும் கூறினோம். காவிரி நீர் மேலாண்மை ஆணையம், 4.7.2023 தேதியிட்ட தனது கடிதத்தில், உச்சநீதிமன்றத்தால் திருத்தப்பட்ட, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி பிலிகுண்டுலுவில் நீரோட்டத்தினை உறுதி செய்யுமாறு கர்நாடகாவுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலும், கர்நாடக அரசு, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த மாதாந்திர அட்டவணையைப் பின்பற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    இந்தக் கடினமான சூழ்நிலையில், கர்நாடகா உடனடியாக தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே, தமிழ்நாட்டில் குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியும் என்பதால், இந்தப் பிரச்சினையில் ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள மாதாந்திர அட்டவணையைப் பின்பற்றவும், பற்றாக்குறையை ஈடு செய்யவும் கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கிடவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் எழுதியுள்ளார்.

    ஜல் சக்தி துறை அமைச்சர் , கர்நாடக அரசு காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கும் மற்றும் நீர் பற்றாக்குறை காலங்களில் சரியான நீர் பங்கீடு செய்வதற்கு தேவையான முறையை செயல்படுத்து வதற்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

    Next Story
    ×