search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • ஆன்லைன் சூதாட்டத்திற்கு இதுவரை 44 பேர் பலியாகி உள்ளனர் பலர் கடனாளியாகி உள்ளனர்.
    • தமிழக மக்களை பெரிதும் பாதிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

    சென்னை:

    40 பேரின் உயிரை பலி வாங்கிய ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடைவிதிக்க மறுக்கும் கவர்னர் ரவியை கண்டித்து சென்னை மிண்ட் மணிகூண்டு பகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

    போராட்டத்துக்கு மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். வட சென்னை மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.

    மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி, தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர். தமிழக கவர்னரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    அப்போது மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-

    40-க்கும் மேற்பட்ட மனித உயிர்களை பலி வாங்கிய ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடைவிதிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாவை தமிழக கவர்னர் ரவி நிலுவையில் வைத்து சூதாட்ட முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆணவ போக்குடன் அந்த மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு இதுவரை 44 பேர் பலியாகி உள்ளனர் பலர் கடனாளியாகி உள்ளனர். தமிழக மக்களை பெரிதும் பாதிக்கும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். கடந்த நான்கு மாதங்களுக்குள் 12 பேர் இறந்து உள்ளனர்.

    பலர் லட்சாதிபதி ஆகும் என்ற கனவில் பல லட்சங்களை இழந்து உள்ளனர். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதுகுறித்து நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழு பொதுமக்களிடம் நடத்திய கருத்து கேட்பு ஆய்வு அறிக்கையில் ஆன்லைன் ரம்மிக்கு உடனடியாக தடை சட்டம் கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் அமலாகும் வரை கம்யூனிஸ்டு கட்சியினரின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×