search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார்படுத்தும் வீரமங்கை வருவாய்
    X

    திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார்படுத்தும் வீரமங்கை வருவாய்

    • காளைகளை தயார் படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
    • ஐல்லிக்கட்டு எந்த ஊரில் நடந்தாலும் அங்கு செல்லும் இளைஞர்களுடன் இவரும் சென்று கேலரியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சமயங்களில் மதுரை மாவட்டத்தை போலவே திண்டுக்கல் மாவட்டத்திலும் பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

    இதற்காக காளைகளை தயார் படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர். திண்டுக்கல் அருகே உள்ள புகையிலைப்பட்டியை சேர்ந்தவர்கள் ஜெயராஜ், வேளாங்கண்ணி தம்பதியர். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் 10-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

    இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 3-வது மகள் ஜெயமணி அதே ஊரில் பள்ளி படிப்பை முடித்து கணினியில் டிப்ளமோ பயிற்சி முடித்த இவர் சிறுவயதிலிருந்தே ஜல்லிக்கட்டில் ஆர்வம் மிக்கவராக இருந்து வந்தார். ஐல்லிக்கட்டு எந்த ஊரில் நடந்தாலும் அங்கு செல்லும் இளைஞர்களுடன் இவரும் சென்று கேலரியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    ஒரு கட்டத்தில் தானும் ஜல்லிக்கட்டு காளைகள் வாங்கி வளர்த்து போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதையே தனது லட்சியமாகவும் கொண்டு செயல்பட தொடங்கினார். மாடுகளை வாங்குவதற்கு பணம் தேவை என்பதால் அதற்காக பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்தார். அதில் தனக்கு கிடைத்த சம்பளத்தை சேமித்துவைத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஜல்லிக்கட்டு கன்றுகளை சந்தையில் வாங்கி முறையாக வளர்த்து கண்ணும் கருத்துமாக அவற்றை பராமரிக்க தொடங்கினார்.

    ஜல்லிக்கட்டு காளைகளுக்கு காரி வெள்ளை, காரி கருப்பு என பெயரிட்டு பாசத்துடன் அவற்றை அழைத்து அகமகிழ்ந்தார். அவற்றை அழைத்துச் சென்று வாடிவாசலில் நிறுத்தி அவிழ்த்து விட்டார்.

    களத்தில் களமிறங்கும் இப்பெண்ணின் 2 காளைகளும் எந்த ஒரு காளையர்களின் பிடியிலும் சிக்காதவாறு களத்திலேயே நின்று தமது காளைகளுக்கு கண் அசைவிலும் விரல் அசைவிலும் சைகையை காட்டி அவற்றை துள்ளி விளையாடச் செய்தார்.

    களத்தில் எவரது பிடியிலும் சிக்காமல் நீண்ட நேரம் நின்று விளையாடி ரசிகர்களின் ஆதரவையும், விழாக் குழுவினர்களின் பரிசுகளையும் அள்ளிவந்தன.

    எவரது பிடியிலும் சிக்காமல் சீறிப் பாய்ந்து வெற்றியுடன் வெளியே வந்ததால் கட்டில், பீரோ, டிவி, சைக்கிள், தங்க காசு, வெள்ளி காசு, உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வென்று வருவதையே ஜெயமணியின் 2 கண்களுக்கு சமமான இரு ஜல்லிக்கட்டு காளைகளும் வாடிக்கையாக வைத்துள்ளன.

    தற்போது வரக்கூடிய பொங்கல் பண்டிகையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளை எதிர்நோக்கி தானும் தன்னுடைய காரி வெள்ளையனும், காரி கருப்பனும் வாடிவாசல் நோக்கி காத்திருப்பதாக பெருமிதத்துடன் அவர் தெரிவித்தார்.

    ஜெயமணி தனது காளைகளை ஜல்லிக்கட்டுக்கு தயார் செய்யும் விதமாக தினமும் நீச்சல் பயிற்சி, நடைபயிற்சி, மண் குத்தும் பயிற்சி, சைகை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் கொடுத்து வருகிறார்.

    மேலும் இந்த காளைகளுக்கு தினமும் ரூ.300 வீதம் மாதம் ரூ.9000 வரை செலவு செய்து வருவதாகவும் தெரிவித்தார். தனது மாடுகளுக்காகவே தான் பணிக்கு செல்வதாகவும் அதன் மூலம் வரும் வருமானத்தை தனது காளைகளுக்கு மட்டுமே செலவிடுவதாக தெரிவித்தார்.

    Next Story
    ×