search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் 3 நாட்களில் ஒரு கோடியே 70 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வினியோகம்
    X

    தமிழகம் முழுவதும் 3 நாட்களில் ஒரு கோடியே 70 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வினியோகம்

    • பொங்கல் தொகுப்பு பெற முடியாமல் வெளியூர் சென்றவர்கள், விடுபட்டவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வழங்கப்படுகிறது.
    • நாளை மாலை வரை ரேஷன் கடைகளில் அவர்கள் வாங்கி செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப்பணம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

    பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் கடந்த 9-ந்தேதி தொடங்கி வைத்ததையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் வினியோகம் செய்தார்கள்.

    மக்கள் நெரிசல் இல்லாமல் வாங்கிச்செல்ல ஏதுவாக டோக்கன் வழங்கப்பட்டு ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தினமும் 200 முதல் 300 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    பொங்கல் தொகுப்பு 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 4 நாட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் பெரும்பாலானவர்கள் வாங்கிச்சென்று விட்டனர். முதல் நாளில் 25 சதவீதம் பேருக்கு வினியோகம் செய்யப்பட்டது.

    2 கோடி குடும்ப அட்டைதாரர்களில் நேற்று வரை 82 சதவீதம் பேருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்பட்டதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதாவது ஒரு கோடியே 70 லட்சம் பேர் நேற்று மாலை வரை தொகுப்பை பெற்றுள்ளனர். பொங்கல் தொகுப்பு வழங்குவது இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

    சென்னை உள்ளிட்ட நகரப்பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பொங்கல் தொகுப்பினை பெற்றுக் கொண்டு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யத் தொடங்கி விட்டனர்.

    பொங்கல் தொகுப்பு பெற முடியாமல் வெளியூர் சென்றவர்கள், விடுபட்டவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வழங்கப்படுகிறது. நாளை மாலை வரை ரேஷன் கடைகளில் அவர்கள் வாங்கி செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    பொங்கலுக்கு பிறகு வழங்கப்படுமா? நாளையுடன் நிறைவடையுமா? என்பது பற்றி அரசு அறிவிப்பு வெளியிடவும் வாய்ப்பு உள்ளது.

    பொங்கல் தொகுப்பு எவ்வித குளறுபடியும் இல்லாமல் இந்த முறை ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொகுப்பில் இடம்பெற்ற பச்சரிசி தரம் வாய்ந்தவையாகவும், வழங்கப்பட்ட முழு நீள கரும்பு நன்றாக இருந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×