search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை- 7 பேரின் மரண தண்டனையும் ரத்து
    X

    டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை- 7 பேரின் மரண தண்டனையும் ரத்து

    • 7 பேரும் மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தனர்.
    • ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர்.

    சென்னை:

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பிரபல நரம்பியல் மருத்துவரான டாக்டர் சுப்பையா வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    பட்டப்பகலில் நடுரோட்டில் அவரை சுற்றி வளைத்து கொலையாளிகள் வெட்டிக்கொன்றனர். எதிர் திசையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ காட்சிகளும் வெளியானதால் டாக்டர் சுப்பையா கொலை அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    7 பேரும் மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர்.

    இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. டாக்டர் சுப்பையாவுக்கும், பொன்னுசாமிக்கும் இடையில் இருந்த நிலப்பிரச்சனை, கொலை சதி திட்டம் பற்றி போலீஸ் தரப்பில் விவரிக்கப்பட்டது.

    கொலை செய்ய கூலிப்படையினருக்கு கொடுப்பதற்காக ரூ.7.5 லட்சம் பரிமாற்றம் செய்தது, அப்ரூவரானவரின் சாட்சியம் ஆகியவற்றையும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று அதிரடி தீர்ப்பு கூறப்பட்டது.

    டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்க தவறி விட்டனர். இதனால் 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை 2 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ஆகியவை ரத்து செய்யப்பட்டது.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    Next Story
    ×