search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் ஆடைகள் களைந்து அலங்கோலமாக படுத்து கிடந்த போதை ஆசாமிகள்

    • ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் புனரமைக்கப்பட்டு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது.
    • வழிப்பறி மற்றும் சமூக விரோத செயல்கள் பஸ் நிலையத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன. இங்கு தமிழகம் மட்டுமின்றி வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்படுகிறது. சம்பள பணத்தை வாங்கும் தொழிலாளர்கள் சிலர் மது குடித்து பணத்தை செலவழித்து விடுகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று ஒரே நாள் இரவில் திருப்பூர் கலைஞர் மத்திய பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே மது அருந்தி விட்டு போதையில் தொழிலாளர்கள், இளைஞர்கள் சிலர் படுத்து கிடந்தனர். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் புனரமைக்கப்பட்டு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது. பஸ் நிலையத்திற்கு கலைஞர் மத்திய பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நவீன முறையில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆனால் குடிமகன்கள் பஸ் நிலையத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு போதையில் இளம்பெண் ஒருவர் பஸ் நிலையத்தில் படுத்து கிடந்த முதியவர் ஒருவரை சரமாரி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகும் வழிப்பறி மற்றும் சமூக விரோத செயல்கள் பஸ் நிலையத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

    விடுமுறை நாளான நேற்று பஸ் நிலையத்தில் பயணிகள் நடந்து செல்லும் பாதை மற்றும் பஸ்கள் நிற்கும் பகுதி, வளாகம் உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போதை மயக்கத்தில் ஆடைகள் களைந்து அலங்கோலமாக படுத்து கிடந்தனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வந்த பெண்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டது.

    இது குறித்து பயணிகள் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை தோறும் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் குடிமகன்கள் அட்டகாசம் மிகவும் அதிகமாக உள்ளது. ஆங்காங்கே ஆடைகள் களைந்து போதையில் விழுந்து கிடக்கின்றனர். இதனை தடுக்க போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இதனால் குடிமகன்களின் அட்டகாசம் தொடர்ந்து நீடிக்கிறது என்றனர்.

    ஆடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், சனிக்கிழமை சம்பளம் வாங்கியதும் தொழிலாளர்கள் சிலர் மது குடித்தே பணத்தை செலவு செய்து விடுகின்றனர். திங்கட்கிழமை வேலைக்கு வராமல் உள்ளதால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலைமை திருப்பூரில் தொடர்ந்து நீடிக்கிறது. எனவே திருப்பூரில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×