search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    எடப்பாடி பழனிசாமி தரப்பினர் 3-வது முறையாக கடிதம்: சபாநாயகர் முடிவு என்ன?
    X

    எடப்பாடி பழனிசாமி தரப்பினர் 3-வது முறையாக கடிதம்: சபாநாயகர் முடிவு என்ன?

    • எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றும் விசயத்தில் வேறு ஏதேனும் முன் உதாரணங்கள் உள்ளதா அல்லது சட்ட சிக்கல்கள் வருமா என்றெல்லாம் சபாநாயகர் ஆய்வு செய்து வருகிறார்.
    • எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றும் விசயத்தில் கோர்ட்டில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே நீடிக்கும் அதிகார சர்ச்சையில் சபாநாயகரின் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் மோதல் முற்றிய நிலையில் பெரும்பாலான மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால் சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வம் வகித்து வந்தார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்தும் அவரை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக உடனடியாக சட்டசபை சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தகவல் தெரிவித்தனர்.

    அந்த கடிதத்தில் அவர்கள், "எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் உதயகுமாரை நியமிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வமும் கடிதம் அளித்தார். தன்னிடம் கேட்காமல் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று அதில் அவர் வலியுறுத்தி இருந்தார்.

    இருதரப்பு கடிதங்களையும் ஆய்வு செய்து நியாயப்படி முடிவு எடுப்பேன் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்து இருந்தார். இந்தநிலையில் மீண்டும் எடப்பாடி தரப்பில் இருந்து சபாநாயகருக்கு மேலும் ஒரு கடிதம் கடந்த 11-ந்தேதி அனுப்பப்பட்டது. அ.தி.மு.க. துணை கொறடா ரவி கொடுத்த அந்த கடிதத்தில், "சட்டசபை கூட இருப்பதால் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி பற்றி விரைந்து முடிவு எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தார்.

    என்றாலும் சபாநாயகர் அப்பாவு உடனடியாக எந்த முடிவும் எடுக்கவில்லை. கடிதங்கள் பற்றி ஆய்வு செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் தன்னிடம் கேட்காமல் முடிவு எடுக்க வேண்டாம் என்று 2-ம் முறையாக மேலும் ஒரு கடிதம் அனுப்பினார்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகர் அப்பாவுவிடம் நேற்று 3-வது முறையாக ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், " எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி. உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று ஏற்கனவே கடிதம் கொடுத்துள்ளோம். சட்டசபை திங்கட்கிழமை கூடுவதால் அதற்கு முன்னதாக முடிவு எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் சபாநாயகர் அப்பாவு இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை. அவர் இரு தரப்பினரின் 5 கடிதங்களையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக தெரியவந்துள்ளது. சட்டத்திற்கு உட்பட்ட முடிவு எடுக்கப்படும் என்று மீண்டும் சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றும் விசயத்தில் வேறு ஏதேனும் முன் உதாரணங்கள் உள்ளதா அல்லது சட்ட சிக்கல்கள் வருமா என்றெல்லாம் சபாநாயகர் ஆய்வு செய்து வருகிறார். இதை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றும் விசயத்தில் கோர்ட்டில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றியும் சபாநாயகர் கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 62 பேர் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கும் கடிதத்தையும் ஆய்வு செய்து வருகிறார். எனவே சபாநாயகர் முடிவு என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சபாநாயகர் தனது முடிவை முன்னதாக தெரிவிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. சட்டசபை கூட்டம் 17-ந்தேதி தொடங்கும் போதுதான் அவர் என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்பது தெரிய வரும். இதை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வருகிற திங்கட்கிழமை தொடங்கும் சட்டசபை கூட்டத்தின் முதல் நாள் அமர்வில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

    அன்றைய தினம் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளது. காலை 8.30 மணிக்குள் ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து விட்டு எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு செல்ல தீர்மானித்து உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியும் அன்று சட்டசபைக்கு வர உள்ளார். சட்டசபை வளாகத்தில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் முதலில் அவர் அமர்ந்திருப்பார்.

    சட்டசபைக்குள் ஓ.பன்னீர்செல்வம் இடம் மாற்றப்பட்டு இருந்தால் அவர் சபைக்குள் வர முடிவு செய்துள்ளார். அப்படி மாற்றப்படாமல் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி இடத்தில் அமர அனுமதிக்கப்பட்டு இருந்தால் சபைக்கு வராமல் அலுவலகத்தில் இருந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சட்டசபை முதல் நாள் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும். அதற்கு பிறகு சபாநாயகரிடம் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி விவகாரத்தை எழுப்ப அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்து உள்ளனர். எனவே இந்த விவகாரம் சட்டசபையில் புயலை கிளப்ப வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×