search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    வருகிற 24-ந் தேதி கோவையில் ஒரே நாளில் முகாமிடும் மு.க.ஸ்டாலின்-எடப்பாடி பழனிசாமி
    X

    வருகிற 24-ந் தேதி கோவையில் ஒரே நாளில் முகாமிடும் மு.க.ஸ்டாலின்-எடப்பாடி பழனிசாமி

    • கோவைக்கு வரும் முதல்-அமைச்சருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுக்க தி.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
    • கோவையில் முதல்-அமைச்சர் செல்லக்கூடிய வழிகள் எங்கும் திரளான வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதியில் உள்ள தி.மு.கவினர் செய்து வருகின்றனர்.

    கோவை:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக அவர் நாளை (23-ந் தேதி) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார்.

    நாளை இரவு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கும் அவர் நாளை மறுநாள்(24-ந் தேதி) கோவை ஈச்சனாரியில் நடக்கும் பிரம்மாண்ட அரசு விழாவில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின், ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    பின்னர் இரவில் பொள்ளாச்சியில் நடக்கும் அரசியல் கட்சி பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேரூரையாற்றுகிறார். அப்போது அவர் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 50 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கோவைக்கு வரும் முதல்-அமைச்சருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுக்க தி.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

    மேலும் கோவையில் முதல்-அமைச்சர் செல்லக்கூடிய வழிகள் எங்கும் திரளான வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதியில் உள்ள தி.மு.கவினர் செய்து வருகின்றனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அதே நாளில், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கோவைக்கு வருகை தர உள்ளார்.

    கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன் மகள் பூப்புனித நன்னீராட்டு விழா நாளை மறுநாள் 24-ம் தேதி (புதன்கிழமை) சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார்.

    அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரம் ஆன பிறகு முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி கோவைக்கு வருகிறார். இதனால் அவருக்கு மற்ற இடங்களில் கொடுக்கப்பட்ட வரவேற்பை விட மிக பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க அ.தி.மு.கவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அரச்சுணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. இதில் கோவை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் திரளாக வந்து உற்சாக வரவேற்பு கொடுப்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

    ஒரே நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கோவையில் இருப்பதால், மாவட்ட முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×