search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நாளை தலைமை கழகம் வருகிறார் எடப்பாடி பழனிசாமி
    X

    பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நாளை தலைமை கழகம் வருகிறார் எடப்பாடி பழனிசாமி

    • எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. நிர்வாக செயல்பாடுகளை மீண்டும் அமல்படுத்த தொடங்கி உள்ளார்.
    • சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை எழுந்ததால் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள்.

    இரு தரப்பினரும் அ.தி.மு.க.வை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிரமாக உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. தலைமை கழகம் முன்பு இருதரப்பு ஆதரவாளர்களும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அப்போது தலைமை கழகத்துக்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆவணங்கள், பரிசுப்பொருட்களை எடுத்துச்சென்றனர்.

    இதையடுத்து அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி கோர்ட்டுக்கு சென்று அந்த சீலை அகற்ற வைத்தார். என்றாலும் தலைமை கழகத்துக்குள் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் செல்ல முடியாத நிலை இருந்தது.

    இந்த நிலையில் ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு சமீபத்தில் அறிவித்தது. இதனால் அந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது நடைமுறைக்கு வந்துள்ளது.

    அவர் அ.தி.மு.க. நிர்வாக செயல்பாடுகளை மீண்டும் அமல்படுத்த தொடங்கி உள்ளார். அதன் ஒருபகுதியாக எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 8.9.2022-வியாழக்கிழமை காலை 10 மணியளவில், தலைமைக் கழகம்-புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வருகை தந்து, தலைமைக் கழக வளாகத்தில் உள்ள கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. தலைமை கழகம் முன்பு மோதல், வன்முறை ஏற்பட்டதால் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் இதுவரை போலீஸ் விசாரணைக்காக காத்திருந்தனர். இந்த நிலையில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேரில் ஆய்வு செய்தனர்.

    ஆவணங்கள், பரிசு பொருட்கள் மாயமானது பற்றி விசாரணை நடத்தி உள்ளனர். இதனால் தலைமை கழகம் வருவதற்கான அனைத்து தடைகளும் இன்றுடன் நீங்கி உள்ளது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி நாளை தலைமை கழகம் வருகிறார்.

    இது அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது. மீண்டும் அ.தி.மு.க.வில் விறுவிறுப்பை ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமியின் வருகை உதவியாக இருக்கும் என்று நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

    இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி நிர்வாக செயல்பாடுகளை மேற்கொள்ளும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் அவருக்கு சாதகமாக முடிவு எடுக்கும் என்பதால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.

    Next Story
    ×