search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓ.பி.எஸ். எம்.எல்.ஏ. பதவியை பறிக்க எடப்பாடி அணி திட்டம்? சபாநாயகரிடம் கடிதம் கொடுக்க ஆலோசனை
    X

    ஓ.பி.எஸ். எம்.எல்.ஏ. பதவியை பறிக்க எடப்பாடி அணி திட்டம்? சபாநாயகரிடம் கடிதம் கொடுக்க ஆலோசனை

    • எடப்பாடி பழனிசாமி அணியினரின் வேகம் ஓ.பன்னீர்செல்வம் அணியினரை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.
    • ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது தெரியாமல் இருக்கும் நிலையில், ஆதரவாளர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நீடித்து வந்த அதிகார மோதல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டதும், அன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்கிற சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு ஓ.பி.எஸ். அணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அணியினர் மிகுந்த உற்சாகத்தோடு அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சி துணை தலைவராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அடுத்த அடியை கொடுக்க அவர்கள் ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஓ.பி.எஸ். அணியில் அவருடன் சேர்த்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், அய்யப்பன் என 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் ஓ.பி.எஸ்.சை தவிர மற்ற 3 பேரையும் கட்சியில் சேர்த்துக்கொள்ளலாம் என்கிற முடிவிலேயே எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஓ.பி.எஸ்.சை மட்டும் இனி எந்த சூழலிலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமியும் அவரது அணியினரும் உறுதியாக உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் எம்.எல்.ஏ. பதவியை எப்படியாவது பறித்துவிட வேண்டும் என்பதில் எடப்பாடி அணியினர் கங்கனம் கட்டிக்கொண்டு செயல்பட தொடங்கியுள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு சட்டப்பூர்வமாக தெரிவித்துவிட்டதை மையமாக வைத்தே எடப்பாடி பழனிசாமி அணியினர் சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி ஓ.பன்னீர்செல்வத்தின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

    பேரவை விதிகளை பயன்படுத்தி 4 எம்.எல்.ஏ.க்களின் பதவியையும் பறிக்க முடியும் என்றாலும் அதனை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.

    ஓ.பி.எஸ். தவிர 3 எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சு நடத்தி அவர்களை அ.தி.மு.க.வுக்குள் மீண்டும் கொண்டு வருவதற்கான வேலைகளை எடப்பாடி பழனிசாமி அணியினர் தொடங்கி இருக்கிறார்கள். இதன்படி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து விட்டால் ஓ.பன்னீர் செல்வம் தனி மரமாகி விடுவார் என்பதே எடப்பாடி பழனிசாமி அணியின் கணிப்பாக உள்ளது.

    அப்படி ஒரு நிலை ஏற்பட்டதும் ஓ.பன்னீர் செல்வத்தை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்கிற மனுவை சட்டப் பேரவை செயலாளர் மற்றும் சபாநாயகரிடம் அ.தி.மு.க. அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    தற்போது எம்.எல்.ஏ. வாக இருப்பதால்தானே ஓ.பன்னீர்செல்வத்தால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் நீடிக்க முடிகிறது.

    அந்த எம்.எல்.ஏ. பதவியை பறித்து விட்டால் அவரால் இனி ஒன்றும் செய்ய முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறுகிறார்கள்.

    இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கையை சபாநாயகர் மேற்கொள்ளாவிட்டால் அடுத்த கட்டமாக கோர்ட்டு உதவியை நாடவும் எடப்பாடி பழனிசாமி அணி திட்டமிட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி அணியினரின் இந்த வேகம் ஓ.பன்னீர்செல்வம் அணியினரை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது தெரியாமல் இருக்கும் நிலையில், ஆதரவாளர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எடப்பாடி பழனிசாமி அணியினர் தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள்.

    அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் அடுத்த கட்ட நடவடிக்கை என்கிற அறிவிப்பை விரைவில் வெளியிட்டு ஆதரவாளர்களை திரட்டி பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது எந்த அளவுக்கு எதிர்கால அரசியலில் கை கொடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Next Story
    ×