search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரத்துக்கு தயாராகிறார்
    X

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரத்துக்கு தயாராகிறார்

    • ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
    • பிப்ரவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் பிரசாரத்தை தொடங்க கமல் திட்டமிட்டு உள்ளார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தள்ளார்.

    கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து வகையான தேர்தல்களையும் சந்தித்து விட்டார். ஆனால் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

    கட்சி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து காய் நகர்த்தி வருகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறும் வகையில் அக்கட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. தனித்து போட்டியிட்டு மக்கள் மத்தியில் சொல்லிக்கொள்ளும்படி வாக்கு சதவீதத்தை பெற்றிருக்கும் கமல்ஹாசனின் கவனம் கூட்டணி அரசியலை நோக்கி நகர்ந்து உள்ளது.

    இதை தொடர்ந்தே ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு அவர் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்ட கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு தேவையான உதவிகள் மக்கள் நீதி மய்யம் கட்சி நிச்சயம் செய்யும் என்று தெரிவித்தார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் பொறுப்பாளராக நிர்வாக குழு உறுப்பினரான அருணாசலம் நியமிக்கப்பட்டு உள்ளார். இன்னும் 2 நாட்களில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட உள்ளது. தேர்தல் பொறுப்பாளரான அருணாசலம் தலைமையின் கீழ் இந்த தேர்தல் பணிக்குழு செயல்படும்.

    இதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசார வியூகங்களை பிரம்மாண்டமாக மேற்கொள்ள அருணாசலம் தலைமையிலான குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர்.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். பிப்ரவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் பிரசாரத்தை தொடங்க கமல் திட்டமிட்டு உள்ளார்.

    வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்ய உள்ள கமல்ஹாசன் ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி 10 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தது. காங்கிரஸ் வேட்பாளரான திருமகன் ஈ.வே.ரா. சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை கமல் கட்சியின் ஓட்டுகள் ஈ.கே.எஸ். இளங்கோவனுக்கு கிடைக்கும் என்பதால் அவர் கூடுதல் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×