search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் குட்கா தடை ஆணையை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்- ராமதாஸ் அறிக்கை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழ்நாட்டில் குட்கா தடை ஆணையை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

    • இந்தியாவில் மதுவுக்கு அடுத்தபடியாக மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவது புகையிலை தான்.
    • தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்களை தடை செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.

    சென்னை

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. தமிழ் நாட்டில் குட்கா, போதைப் பாக்குகள் உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்களை மீண்டும் தடை செய்வதற்கு வழிவகை செய்யும் சுப்ரீம்கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.

    அந்தத் தீர்ப்பை செயல்படுத்தி, குட்கா விற்பனைக்கும், நடமாட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குட்கா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கணையப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல வகை புற்றுநோய்களும், ஆஸ்துமா, நீரிழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

    இந்தியாவில் மதுவுக்கு அடுத்தபடியாக மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவது புகையிலை தான். புகையிலை பழக்கத்தால் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் அனைத்து வகையான புகையிலைப் பொருட்களின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டியது கட்டாயமாகும்.

    தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டிருந்த காலத்திலேயே ஆண்டுக்கு 3,000 டன்னுக்கும் கூடுதலாக குட்கா விற்பனை செய்யப்படுவதாக கடந்த கால மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இப்போதும் கூட தமிழக அரசால் ஆண்டுக்கு இருமுறை குட்கா மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை தீவிர ஆய்வுகளை நடத்தும் போதிலும் கூட, தமிழகத்தில் குட்கா விற்பனை தடையின்றி நடைபெறுகிறது.

    எனவே, தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்களை தடை செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும். அத்துடன் சட்டவிரோதமாக குட்கா விற்கப்படுவதையும் முற்றிலுமாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×