search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சென்னையில் களைகட்டிய தீபாவளி இறுதி கட்ட விற்பனை- ஜவுளி, பட்டாசு, நகை கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
    X

    சென்னையில் களைகட்டிய தீபாவளி இறுதி கட்ட விற்பனை- ஜவுளி, பட்டாசு, நகை கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

    • பிரபல ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளை திறப்பதற்கு முன்பே மக்கள் கூடி நின்றனர்.
    • சென்னையை சுற்றியுள்ள பகுதி மக்களும் குவிந்ததால் கடை வீதிகள் களை கட்டின. நள்ளிரவு 12 மணிக்கு மேல் இருந்து விற்பனை நடந்தது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால் கடைசி நேரத்தில் விற்பனை சூடு பிடித்துள்ளது.

    பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு, பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் புத்தாடைகள் எடுக்க ஜவுளி கடைகளுக்கு மக்கள் படையெடுக்கிறார்கள். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு போனசும் கிடைத்து விட்டதால் குடும்பத்தோடு ஜவுளி கடைகளை மொய்க்கிறார்கள்.

    தீபாவளிக்கு நாளை ஒருநாள் மட்டுமே இருப்பதால் ரெடிமேடு ஆடைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் கூட்டம் சென்னையில் உள்ள கடை வீதிகளில் காலையிலேயே காணப்பட்டது.

    வர்த்தகப் பகுதியான தி.நகர், பழைய வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், அண்ணா நகர், வடபழனி, பெரம்பூர், மைலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், நுங்கம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, போரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், நகை கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தன.

    பிரபல ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளை திறப்பதற்கு முன்பே மக்கள் கூடி நின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதி மக்களும் குவிந்ததால் கடை வீதிகள் களை கட்டின. நள்ளிரவு 12 மணிக்கு மேல் இருந்து விற்பனை நடந்தது.

    பெரும்பாலான வீதிகள் தீபாவளி கடைகளால் நிரம்பி இருந்தன. மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று பொருட்கள் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திடீர் கடைகள் உதயமானதால் மக்கள் வீதிகளிலேயே பெரும்பாலான தீபாவளி பொருட்களை வாங்கினார்கள். இன்றும் நாளையும் இன்னும் கூட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

    மழை இல்லாததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பண்டிகையை சார்ந்த அனைத்து வியாபாரங்களும் சூடு பிடித்துள்ளன.

    இனிப்பு கடைகளிலும் மக்கள் கூட்டமாக மொய்த்தனர். மொத்தமாக இனிப்புகளை வாங்கி சென்றனர். உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு கொடுப்பதற்காக அன்பளிப்பு பெட்டிகளை வாங்கி சென்றனர்.

    தீபாவளியின் முத்தாய்ப்பாக பட்டாசு இருப்பதால் பசுமை பட்டாசு விற்பனையும் அமோக நடந்து வருகிறது. சென்னையில் பல பகுதிகளில் பெரிய அளவிலான கடைகள் அமைத்து பட்டாசு விற்கப்படுகின்றன.

    குழந்தைகளை மகிழ்விப்பதற்காக பெற்றோர் பட்டாசு வாங்கிச் சென்றனர். இந்த ஆண்டு பட்டாசு விலை உயர்ந்த போதிலும் விற்பனை விறுவிறுப்பாக உள்ளது. தீவுத்திடலில் 35 பட்டாசு கடைகள் ஒரே இடத்தில் செயல்படுவதால் மொத்தமாக வாங்கக் கூடியவர்கள் காரில் சென்று கொள்முதல் செய்து வருகிறார்கள்.

    தீவுத்திடல் மைதானம் திருவிழா போல காட்சி அளிக்கிறது. மக்கள் காலையிலேயே பட்டாசு வாங்க குவிகிறார்கள்.

    தீபாவளி ஜவுளி, பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் பஸ், ரெயில், கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் செல்வதால் சாலைகளில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் வசதிக்காக பஸ், மெட்ரோ ரெயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×