search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உலகம்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்- பார்வையாளர் உள்பட 15 பேர் படுகாயம்
    X

    உலகம்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்- பார்வையாளர் உள்பட 15 பேர் படுகாயம்

    • ஜல்லிக்கட்டு போட்டியை காண திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அறிவுரையின் பேரில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    தாடிக்கொம்பு:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி முதன்முறையாக கடந்த 20-ந்தேதி கொசவபட்டியில் ஜல்லிகட்டு நடந்தது.

    2-வது போட்டியாக திண்டுக்கல் அருகில் உள்ள உலகம்பட்டியில் புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிகோரப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்பேரில் இன்று போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்க 500 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.

    மதுரை, திருச்சி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 காளைகள் வரவழைக்கப்பட்டது. மேலும் மாடுபிடி வீரர்களுக்கு 22பேர் கொண்ட மருத்துவ குழுவினர் உடல்பரிசோதனை செய்து போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    காளைகளை பரிசோதிக்க 25 பேர் கொண்ட மருத்துவகுழுவினர் வந்திருந்தனர். போட்டிகளை திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி எடுத்துகொண்டதற்கு பின் 25 பேர் கொண்ட குழுவாக மொத்தம் 15 பிரிவு பிரிக்கப்பட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.

    வாடிவாசலை கடந்து துள்ளி குதித்து ஓடிவந்த காளைகளை வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். வெற்றிபெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், அண்டா, டி.வி, கடிகாரம், செல்போன், தங்கநாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    போட்டியை காண திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அறிவுரையின் பேரில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த போட்டியில் 4 பார்வையாளர்கள் உள்பட மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள் என 15 பேர் படுகாயமடைந்தனர்.

    அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் பெரியதனக்காரர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×