search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேந்தமங்கலத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலம்- 400 காளைகள் , 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி
    X

    சேந்தமங்கலத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலம்- 400 காளைகள் , 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி

    • காளைகளும் கால்நடை மருத்துவக் குழுவினர் சோதனையிட்ட பிறகே வாடி வாசலுக்குள் அனுமதிக்கப்பட்டது.
    • மாடு பிடி வீரர்களுக்கோ, பொதுமக்களுக்கோ காயங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட சேந்தமங்கலத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படாத நிலையில் இன்று சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

    போட்டியினை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்மாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து வாடிவாசல் வழியாக வெளிவரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கும் காட்சிகளை கண்டு களித்தார்.

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் முன்னிலையில் மாடு பிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்தபின் போட்டிகள் தொடங்கப்பட்டது. இதில் திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் 400 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 300 மாடுபிடி வீரர்கள் களத்தில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    முன்னதாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே விழாக் குழுவினரும், மாடு பிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு நடக்கும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    அதே போல் காளைகளும் கால்நடை மருத்துவக் குழுவினர் சோதனையிட்ட பிறகே வாடி வாசலுக்குள் அனுமதிக்கப்பட்டது. மாடு பிடி வீரர்களுக்கோ, பொதுமக்களுக்கோ காயங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×