search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேவல் சண்டை போட்டிக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பும் போலீசார்
    X

    சேவல் சண்டை போட்டிக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பும் போலீசார்

    • தமிழக கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது.
    • கரூர் மாவட்டத்தில் பூலாம்வலசு கிராமத்தில் சேவல் சண்டைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    கரூர்:

    தமிழக கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது. ஜல்லிக்கட்டு காளைகளை எப்படி பொங்கல் பண்டிகைக்கு முன்பு இருந்து தயார்படுத்துகிறார்களோ அதேபோல சண்டை சேவல் களையும் தயார்படுத்துகின்றனர்.

    பொதுவாகவே சேவல்களுக்க சக சேவல்களை அடக்கி ஆளவேண்டும் என்ற மனநிலை உண்டு. ஒரே கூண்டில் அடைக்கபபட்ட சேவல்களாக இருந்தாலும் கூட தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி குணம் இருக்கும். அதனால் அவற்றை சண்டையிட செயல்வது என்பது பயிற்சியாளர்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை.

    சேவல் சண்டையானது சேவல்கட்டு, கோட்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை என ஒவ்வொறு மாவட்டத்திற்கும் ஏற்ப வெவ்வேறு விதிகளோடு பல்வேறு பெயர்களில் நடத்தப்படுகிறது. சேவல் கட்டுக்கு சேவல்களை கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை, உள்ளிட்ட ஊட்டச்சத்து தானியங்களை உணவாக கொடுத்து வளர்ப்பார்கள்.

    கரூர் மாவட்டத்தில் பூலாம்வலசு கிராமத்தில் சேவல் சண்டைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் நடைபெறும் இச்சேவல் சண்டையில் அண்டை மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சேவல்களை கொண்டு வந்து இந்த கிராமத்தில் சேவல் சண்டையில் பங்கேற்பார்கள். இவற்றை வேடிக்கை பார்க்க ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வர்.

    போட்டியில் தோற்றுப் போகும் சேவலை வெற்றி பெற்ற சேவல் உரிமையாளருக்கு கொடுத்து விடுவர். இந்த சேவல் கோச்சை என்று அழைக்கப்படும் கறி விருந்திற்கு பயன்படுத்தப்படும். இந்த சேவல்கள் விற்பனைக்கும் வரும். அதனை ரூ.15 ஆயிரம் வரை விலை கொடுத்தும் வாங்குவார்கள்.

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி இக்கிராமத்தில் சேவல் சண்டை நடத்துவதற்காக விழா கமிட்டியினர், போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் நூற்றுக்கணக்கான பந்தல்கள் அமைக்கப்பட்டு குடிநீர், வாகன நிறுத்துமிடம், கடைகள் உள்ளிட்ட வசதிகள் தடபுடலாக ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்நிலையில் நீதிமன்ற தடையாணை உள்ளதால், அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து அரவக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பூலாம்வலசு கிராமத்திற்கு வரக்கூடிய வெளியூர் வாகனங்கள் மற்றும் அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் தங்கியுள்ள வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களையும் கண்டறிந்து அவர்களை வெறியேறும்படி கூறி வருகின்றனர்.

    மேலும் வெளியூர்களிலிருந்து போட்டியில் பங்கேற்பதற்காக சேவலுடன் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனை பார்த்த விழா கமிட்டியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் விரைந்து வந்து, விழா கமிட்டியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×