search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெரவள்ளூர், திரு.வி.க.நகரில் மின்தடை மின்வாரிய அலுவலகத்தை நள்ளிரவில் முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்-மறியல்
    X

    பெரவள்ளூர், திரு.வி.க.நகரில் மின்தடை மின்வாரிய அலுவலகத்தை நள்ளிரவில் முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்-மறியல்

    • வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொளத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது
    • பொது மக்கள் கொளத்தூர் அடுத்த பெரியார் நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

    கொளத்தூர்:

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் மக்கள் தவித்து வருகிறார்கள். நேற்று சென்னையி 105 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது.

    வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொளத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இரவு நேரத்தில் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் புழுக்கத்தாலும், வியர்வையாலும் தூக்கம் இல்லாமல் தவித்தனர். குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி முதலே கொளத்தூர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. நள்ளிரவு 1 மணியளவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் நீண்ட நேரம் வரை சீராகவில்லை.

    இதனால் கடும் அவதிக்குள்ளான பொது மக்கள் கொளத்தூர் அடுத்த பெரியார் நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

    ஆனால் ஊழியர்கள் சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. மேலும் மின்சப்ளை சீராவதிலும் தாமதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் நாற்காலியுடன் வந்து மின்வாரிய அலுவலகம் முன்பு அமர்ந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பின்னர் மின்சப்ளை வழங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதே போல் செம்பியம், திரு.வி.க. நகர் பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாதவரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறிலில் ஈடுபட்டனர். செம்பியம் மின்வாரிய அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.

    தகவல் அறிந்ததும் திரு. வி.க.நகர் போலீசார் விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அப்பகுதியில் மின்சப்ளை சீரானது.

    புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், ஓட்டேரி பகுதிகளில் நள்ளிரவில் மின் தடை ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பேசின் பிரிட்ஜ் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அம்பத்தூர், ஒரகடம், புதூர், பானுநகர், கள்ளிகுப்பம் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக தினமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது. நேற்று இரவு 7 மணி அளவில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. பின்னர் மின் சப்ளை வழங்கப்படவில்லை. இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் அப்பகுதி மக்கள் தவித்தனர். புழுக்கத்தால் விடிய, விடிய தவிக்கும் நிலை ஏற்பட்டது.

    இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் கள்ளிக்குப்பத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஊழியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை 4 மணிக்கு பின்னரே மின்சாரம் சீரானது.

    இதேபோல் திருவேற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு சுமார் 3 மணிநேரம் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும் போது, 'தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இரவு நேரத்தில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வீடுகளில் ஏ.சி. பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஒரே நேரத்தில் பெரும்பாலான வீடுகளில் ஏ.சி பயன்படுத்துவதால் மின் சப்ளை செய்வதில் பாதிப்பு ஏற்படுகிறது' என்றார்.

    Next Story
    ×