search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மோடி பயப்படுவதாக சொல்லும் மு.க.ஸ்டாலின், பிரதமர் வேட்பாளரை சுட்டிக்காட்ட பயப்படுவது ஏன்? குஷ்பு கேள்வி
    X

    மோடி பயப்படுவதாக சொல்லும் மு.க.ஸ்டாலின், பிரதமர் வேட்பாளரை சுட்டிக்காட்ட பயப்படுவது ஏன்? குஷ்பு கேள்வி

    • உங்களில் யார் பிரதமர் வேட்பாளர்? ராகுலா? நிதிஷ்குமாரா? மம்தாவா? சரத்பவாரா? கெஜ்ரிவாலா? அகிலேஷா? சொல்லுங்கள்.
    • மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியை பார்த்து மோடி பயப்படுகிறார் என்று கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக்காகத்தான் இருக்கும்.

    சென்னை:

    பிரதமர் மோடிக்கு எதிராக களம் இறங்கி இருக்கும் இந்தியா கூட்டணி பற்றி பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    காமெடி கூட்டமாகத் தான் பார்க்கிறேன். தேர்தலில் போட்டி போட வேண்டும், வெற்றி பெற வேணடும் என்ற ஆசை எல்லா கட்சிகளுக்கும் இருக்கும். தப்பில்லை.

    ஆனால் பிரதமர் மோடியை தோற்கடிப்பதற்காக 26 பேர் ஒன்று சேர்ந்துள்ளார்கள். மோடி தனி ஒருவராகத்தானே நிற்கிறார். அவரை தோற்கடிக்க இத்தனை பேர் உங்களுக்கு தேவைப்படுகிறது. முடிந்தால் அவரை எதிர்த்து வெற்றி பெறுங்கள்.

    எங்களுக்கு தெரியும் பிரதமர் மோடிதான் என்று. உங்களில் யார் பிரதமர் வேட்பாளர்? ராகுலா? நிதிஷ்குமாரா? மம்தாவா? சரத்பவாரா? கெஜ்ரிவாலா? அகிலேஷா? சொல்லுங்கள்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியை பார்த்து மோடி பயப்படுகிறார் என்று கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக்காகத்தான் இருக்கும்.

    மோடி பயப்படுகிறாரா? இல்லையா? என்பது இருக்கட்டும். எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இவர்தான் என்று சொல்ல மு.க.ஸ்டாலினுக்கு ஏன் பயம்? கடந்த தேர்தலில் ராகுல்தான் பிரதமர் என்று துணிந்து சொன்னாரே. இந்த தேர்தலில் ஏன் சொல்ல பயப்படுகிறார்? தோற்று விடுவார் என்ற பயமா? அல்லது மற்ற கட்சிகள் ஏற்காது என்ற பயமா? மக்கள் ஏற்க மாட்டார்கள் என்ற தயக்கமா?

    ராகுல் அமேதியில் மீண்டும் போட்டியிடுவார். ஸ்மிருதி இராணியை தோற்கடிப்பார் என்று சொல்லட்டுமே.

    புது கூட்டணி. அதன் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள எனக்கும் ஆசைதான்.

    நாட்டில் 10-ல் 8 பேர் மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். நாட்டை சீர்திருத்த உலக அளவில் உயர்த்தி வருவதை இந்தியா கூட்டணி விரும்பாமல் இருக்கலாம். ஆனால் இந்தியர்கள் விரும்புகிறார்கள்.

    தனது சீர்திருத்தத்தின் அடுத்த கட்டமாக ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை விவாதத்துக்கு கொண்டு வந்துள்ளார். இதுவும் நம் நாட்டில் நடைமுறையில் இருந்ததுதான். அப்போது இந்த கட்சிகளும் ஆதரிக்கத் தானே செய்தது.

    இப்போது பயப்படுவதற்கு காரணம் இஷ்டத்துக்கு பணம் கொடுக்க முடியாது. பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது என்பதால்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×