என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஆடை ஏற்றுமதியாளர்களுக்கான கடன் வட்டி மானியத்தை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்- உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
- ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கு வழங்கப்படும் 3 சதவீத வட்டி மானியத்தை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
- கொரோனா சமயத்தில் வழங்கியதை போல மேலும் ஓர் ஆண்டுக்கு கடன் திட்டத்தை தொடர வேண்டும்.
திருப்பூர்:
டாலர் நகரம் என்று அழைக்கப்படும் திருப்பூர் பனியன் தயாரிப்பில் பிரசித்தி பெற்றது. இங்கு உள்ளாடைகள் மட்டுமல்லாது டீ -சர்ட், பின்னல் துணியால் ஆன ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் எந்த மூலைக்கு சென்றாலும் திருப்பூரில் இருந்து வரும் பின்னலாடைகளுக்கு தனி மவுசு உள்ளது. அதே போல் இந்திய பின்னலாடைகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் தனி மவுசு உண்டு. நிறம், தரம், வடிவமைப்பு என ஏற்றுமதி ஆடைகள் ஐரோப்பிய வாடிக்கையாளர்களை கவர்வதால் வர்த்தகர்களின் முதல் தேர்வாக திருப்பூர் உள்ளது.
ஆண்டுக்கு 33 ஆயிரம் கோடி ரூபாய் பின்னலாடை ஏற்றுமதி மற்றும் 35 ஆயிரம் கோடி ரூபாய் உள்நாட்டு உற்பத்தி என 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பின்னலாடை துறை நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பற்றாக்குறை காரணமாக நூல் விலை கிலோ ஒன்றுக்கு 220 ரூபாயில் இருந்து படிப்படியாக உயர்ந்து 480 ரூபாய் என்ற வரலாறு காணாத உச்ச விலையை பதிவு செய்தது. அது குளிர்கால ஆடைகளுக்கான ஆர்டர்கள் பெறும் சமயம். அடுத்த 6 மாதங்களுக்கான வேலைவாய்ப்பை நிர்ணயம் செய்யும் இந்த சமயத்தில் நூலின் விலை நிலையாக இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் இருந்ததால் புதிதாக ஆர்டர்கள் பெற ஏற்றுமதியாளர்கள் தயக்கம் காட்டினர்.
இதன் காரணமாக இந்தியாவிற்கு வர வேண்டிய குளிர்கால ஆடைகளுக்கான ஆர்டர்களை பங்களாதேஷ் தட்டிச்சென்றது. இலவச வர்த்தக ஒப்பந்தம் கைவசம் இருந்ததால் 12 சதவீத வரி விலக்குடன் குறைந்த விலைக்கு பங்களாதேஷ் இந்த ஆர்டர்களை பெற்றது. இதன் விளைவாக ஆர்டர் இன்றி திருப்பூர் பின்னலாடை துறை சரிவை சந்திக்க துவங்கியது. மீண்டும் ஆர்டர்களை பெற ஏற்றுமதியாளர்கள் முயன்ற போது ரஷியா- உக்ரைன் போர் ஐரோப்பாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்நாட்டு மக்களின் வாங்கும் சக்தி குறைந்ததால் ஆர்டர்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதனால் பல நிறுவனங்கள் மூடப்பட்டு ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்தனர். புதிய ஆர்டர்கள் இல்லாமல் நூல் தேவை குறைந்ததால் மீண்டும் நூல் விலை படிப்படியாக குறைந்து கிலோ 230 ரூபாய் என்ற நிலைக்கு திரும்பி உள்ளது. என்றாலும் ஆர்டர்கள் இல்லாததால் பல நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. புதிய ஆர்டர்கள் பெற ஏற்றுமதியாளர்கள் அதிக அளவில் மாதிரி ஆடைகளை வடிவமைத்து அனுப்பி வருகின்றனர்.
இந்த ஆர்டர்கள் வந்து சேர இரண்டு மாதங்கள் வரை ஆகலாம் என்பதால் திருப்பூர் பழைய நிலைக்கு திரும்ப 3 மாதங்கள் வரை ஆகும் எனவும் இந்த நேரத்தில் ஏற்றுமதியாளர்கள் துவண்டு போகாமல் தடுக்க மத்திய அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பை வழங்கும் பின்னலாடை துறை மீண்டும் புத்துயிர் பெற வரும் மத்திய பட்ஜெட்டில் ஜவுளி துறைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல் கூறுகையில்,
ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கு வழங்கப்படும் 3 சதவீத வட்டி மானியத்தை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். கொரோனா சமயத்தில் வழங்கியதை போல மேலும் ஓர் ஆண்டுக்கு கடன் திட்டத்தை தொடர வேண்டும். மேலும் ஏற்றுமதி துறைக்கு 200 கோடி என்ற கடன் வரம்பை 5 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும். அதிக தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அறிவிக்க வேண்டும் என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.என்.சுப்ரமணியம் கூறுகையில்,
30 ஆண்டுகளாக இல்லாத அளவு பின்னலாடை துறை சரிவை சந்தித்துள்ளது, பஞ்சு விலை ஏற்ற இறக்கம் மற்றும் கொரோனா பாதிப்புக்கு பிறகு இந்த தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கடன் வட்டி மானியத்தை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஏற்றுமதி கடன் திரும்ப செலுத்தும் காலக்கெடுவை 180 நாட்களில் இருந்து 270 நாட்களாக அதிகரிக்க வேண்டும். ஐரோப்பாவுடன் பங்களாதேஷ் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்திருப்பது அந்த நாட்டுக்கு கூடுதல் ஆர்டர்களை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்திய அரசும் ஐரோப்பிய நாடுகள் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். கனடா -ஆஸ்திரேலியா நாடுகள் உடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக 30 சதவீத ஆர்டர்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில்,
70 சதவீதம் அளவிற்கு பின்னலாடை தொழில் முடங்கி உள்ளதாகவும் அதனை மீட்டெடுக்க வங்கி கடன் உதவிகளை தாராளமாக செய்ய வேண்டும். மூலப்பொருளான நூல் விலை ஏற்ற இறக்கத்தை தவிர்க்க பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் . ஜவுளித்துறைக்கு முக்கியத்துவம் தரும் பட்ஜெட்டாக அமைய வேண்டும் என்றார்.
பின்னலாடை உற்பத்தியாளர் செல்வகுமார் தெரிவிக்கையில்,
வருகிற பட்ஜெட்டில் நூல் விலை சீராக அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும், மாதாமாதம் நூல் விலையில் மாற்றம் வருவதால் ஆர்டர்கள் பெரும்பொழுது ஒரு விலையும், பெற்று தயாரிப்பில் இருக்கும் பொழுது ஒரு விலையும் உள்ளது. இதனால் ஆர்டர்களை முடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே வருடத்திற்கு ஒருமுறை நூல் விலை நிர்ணயிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்