search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்ட ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க தயாரா? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
    X

    சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்ட ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க தயாரா? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

    • போலீசார் பதில் மனு தாக்கல் செய்யாமல், டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்கின்றனர்.
    • சவுக்கு சங்கர் தாய் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜான் சத்தியன், இந்த வழக்கை மீண்டும் டிவிசன் பெஞ்சுக்கு அனுப்ப அவசியமில்லை. அது நீதித்துறை நேரத்தை வீணடிக்கும் செயல்’’ என்றார்.

    சென்னை:

    பெண் போலீஸ் குறித்தும், போலீஸ் உயர் அதிகாரிகள் குறித்தும் அவதூறாக பேசிய யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சவுக்கு சங்கரின் தாயார் கமலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர், மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கரை சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.

    ஆனால், நீதிபதி பி.பி.பாலாஜி, போலீஸ் கமிஷனர் உத்தரவை ரத்து செய்ய மறுத்து, பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

    இதையடுத்து, இந்த வழக்கு 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். அவர் முன்பு கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.

    இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''இந்த வழக்கில் 4-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, ஒரு நீதிபதி பி.பி.பாலாஜி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அந்த தீர்ப்பை ஏற்று, இந்த வழக்கை டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது'' என்று வாதிட்டார்.

    இதை ஏற்க மறுத்த நீதிபதி, ''குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பான ஆவணங்களை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பார்வையிட்டுள்ளார்.

    அது சட்டப்படி பிறப்பிக்கப்படவில்லை என தன் உத்தரவில் கூறியுள்ளார். எனவே, இந்த வழக்கில் இரு நீதிபதிகளின் உத்தரவில் எது சரி என்பதை முடிவு செய்ய என்னை (நீதிபதியை) பொறுப்பு தலைமை நீதிபதி நியமித்துள்ளார். பதில் மனுதாக்கல் செய்ய 15 நாட்கள் ஏற்கனவே நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

    கடந்த முறை என்னிடம் விசாரணைக்கு வரும்போது, அவகாசம் வழங்கினேன். ஆனால், போலீசார் பதில் மனு தாக்கல் செய்யாமல், டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்கின்றனர்.

    இப்போது இந்த வழக்கில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது தவறு என்று ஒருவேளை முடிவுக்கு வந்தால், சவுக்கு சங்கரை சிறையில் இதுவரை அடைத்ததற்காக ஒரு மணி நேரத்துக்கு ரூ.10 ஆயிரம் என்று அரசு வழங்க தயாராக உள்ளதா?

    இதற்கு தயார் என்றால் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் தருகிறேன்'' என்று கருத்து தெரிவித்தார்.

    சவுக்கு சங்கர் தாய் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜான் சத்தியன், இந்த வழக்கை மீண்டும் டிவிசன் பெஞ்சுக்கு அனுப்ப அவசியமில்லை. அது நீதித்துறை நேரத்தை வீணடிக்கும் செயல்'' என்றார்.

    இதையடுத்து இந்த வழக்கில் 2.15 மணிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.

    Next Story
    ×