search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க.வில் பொறுப்பு வகித்த அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், மருமகன் நீக்கம்
    X

    தி.மு.க.வில் பொறுப்பு வகித்த அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், மருமகன் நீக்கம்

    • அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், மருமகன் ஆகிய இருவரும் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இருப்பது திண்டிவனம் தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • 13 தி.மு.க. கவுன்சிலர்கள் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினர் தலையீட்டை கண்டித்து அண்மையில் தி.மு.க தலைமை கழகத்துக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தனர்.

    செஞ்சி:

    சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறையின் அமைச்சராக பதவி வகித்து வருபவர் செஞ்சி மஸ்தான்.

    இவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் உள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்பாக செஞ்சியில் நடந்த தி.மு.க. செயல்வீரர்களின் கூட்டத்தில் பிரச்சனை ஏற்பட்டு, நிர்வாகிகளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் நசீரை செஞ்சி நகர தி.மு.க. செயலாளர் பொறுப்பிலிருந்து தலைமைக்கழகம் விடுவித்தது.

    இந்நிலையில் தி.மு.க. தலைமைக் கழகத்தில் இருந்து இன்று ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக உள்ள மொக்தியார் அலி மஸ்தான், அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக செஞ்சி அடுத்த பெரும்புகை மாரியம்மன் கோவில் வீதியில் வசிக்கும் ரோமியன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதவியில் இருந்து நீக்கப்பட்ட மொக்தியார் அலி, அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் ஆவார்.

    இதேபோல விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக உள்ள ரிஸ்வான், அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக செஞ்சி அடுத்த பள்ளியம்பட்டு கிராமம் கபூர் சாகிப் தெருவில் வசிக்கும் ஷேக்வாகித் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரிஸ்வான் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மருமகன் ஆவார்.

    மேலும், ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகியுடன் இணைந்து செயலாற்ற வேண்டுமென தி.மு.க. தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி, மருமகன் ரிஸ்வான் ஆகிய இருவரும் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இருப்பது திண்டிவனம் தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டிவனம் நகராட்சியில் உள்ள 13 தி.மு.க. கவுன்சிலர்கள் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினர் தலையீட்டை கண்டித்து அண்மையில் தி.மு.க தலைமை கழகத்துக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் இன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×