search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கோவையில் 12-ந்தேதி கூட்டாக பிரசாரம்: மு.க.ஸ்டாலின்-ராகுல் பங்கேற்கும் கூட்டத்தில் 1½ லட்சம் பேர் திரள்கிறார்கள்
    X

    கோவையில் 12-ந்தேதி கூட்டாக பிரசாரம்: மு.க.ஸ்டாலின்-ராகுல் பங்கேற்கும் கூட்டத்தில் 1½ லட்சம் பேர் திரள்கிறார்கள்

    • தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
    • கோவைக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி எம்.பி. ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவும் இந்தியா கூட்டணி கட்சியினர் தயாராகி வருகிறார்கள்.

    கோவை:

    தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சியினரும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

    ஆளும் கட்சியான தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டுகள், கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

    அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமியை ஆதரித்து வருகிற 12-ந்தேதி கோவையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இந்த பிரசாரத்தின் போது முதலமைச்சருடன், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தியும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

    அன்றைய தினம் மாலையில் கோவை எல் அண்ட் டி புறவழிச்சாலை செட்டிப்பாளையம் அருகே பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தி எம்.பியும் ஒன்றாக இணைந்து தி.மு.க. வேட்பாளர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் ஆதரவு திரட்டி பேசுகிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத்திற்காக எல் அண்ட் டி புறவழிச்சாலை செட்டிப்பாளையம் அருகே 150 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு தற்போது பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள், பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகளும் போடப்படுகிறது.

    இதுதவிர கூட்டத்திற்கு வரும் கட்சியினர், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யும் பணி தற்போதே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் இருந்து தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், வி.சி.க உள்பட கூட்டணி கட்சியினர் என 1½ லட்சம் பேர் திரள்கிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல்காந்தி எம்.பியும் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருப்பது இந்தியா கூட்டணி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவைக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி எம்.பி. ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவும் இந்தியா கூட்டணி கட்சியினர் தயாராகி வருகிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட உள்ளது.

    Next Story
    ×