search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடமாடும் காய்கறி அங்காடி தொடங்குங்கள்- மு.க.ஸ்டாலின் உத்தரவு
    X

    தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடமாடும் காய்கறி அங்காடி தொடங்குங்கள்- மு.க.ஸ்டாலின் உத்தரவு

    • தக்காளி சிறிய வெங்காயம் போன்ற பொருட்கள் கூட்டுறவு கடைகளில் குறைந்த விலைக்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் காய்கறி-மளிகை பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அதை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் என்னென்ன பொருட்கள் விலை உயர்ந்துள்ளது, அதை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களாக தக்காளி, சிறிய வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இப்போது தக்காளி சிறிய வெங்காயம் போன்ற பொருட்கள் கூட்டுறவு கடைகளில் குறைந்த விலைக்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.

    இது தொடர்பாக பல்வேறு துறையை சார்ந்த நீங்கள் உங்கள் துறை மூலமாக அத்தியாவசிய பொருட்களை கூட்டுறவு அங்காடிகளிலும், நியாய விலை கடைகளிலும் சந்தை விலையை விட குறைவாக விற்க ஏற்பாடு செய்திட வேண்டும்.

    தேவைப்பட்டால் இதற்கென தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல்களை மேற்கொள்ள வேண்டும்.

    அதே சமயம் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை கடுமையாக கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமைப் பொருள் காவல் துறையினர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

    அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதிலும் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகள் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும்.

    காய்கறி விலை உயர்ந்தாலும், அதன் பலன் நேரடியாக விவசாயிகளுக்கு செல்லவில்லை என்று கேள்விப்படுகிறேன். இதனை சரி செய்ய உழவர் சந்தைகளின் செயல்பாடுகள் பெரிதும் உதவும்.

    எனவே வேளாண் துறை இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டது போல் நடமாடும் காய்கறி அங்காடிகளை தற்போது பெருமளவு மாநகராட்சி மற்றும் தோட்டக் கலைத் துறை மூலம் தொடங்கலாம்.

    இவ்வாறு நீங்கள் உங்கள் துறைகள் மூலம் மேற் கொண்ட மற்றும் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×