search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    O Panneer Selvam
    X

    திருவாரூரில் தாதுமணல் எடுக்க தனியாரை அனுமதித்ததை கண்டித்து 11-ந்தேதி ஆர்ப்பாட்டம்- ஓ.பன்னீர்செல்வம்

    • திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் சிவநாராயணசாமி முன்னிலையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
    • ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் சிவ நாராயணசாமி மேற்கொள்வார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கிக் கொண்டிருக்கின்ற காவேரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் 2020 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் டெல்டா மாவட்டங்களிலுள்ள விவசாய நிலங்களை பாதுகாப்பதாகும்.

    இந்த நோக்கத்தை முற்றிலும் சிதைக்கும் வகையில், த. வடகாடு கிராமங்களில் 11 ஏக்கர் நிலப்பரப்பில் 26 அடி ஆழத்திற்கு சிலிகான் தாது மணல் எடுத்து விற்பனை செய்ய தனியாருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். மேற்படி கிராமத்தில் தற்போது 10 அடியிலேயே நிலத்தடி நீர் கிடைப்பதாகவும், இதன்மூலம் தட்டுப்பாடின்றி 3000 கிராம வாசிகளுக்கு குடிநீர் கிடைத்து வருவதாகவும், இந்தச் சூழ்நிலையில் சிலிகான் தாது மணல் எடுத்தால் குடிநீர் ஊற்று நின்று போய் கடல்நீர் உட்புகுந்து விடுமென்றும், கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய தென்னை அழிந்துவிடும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    மணல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதை ரத்து செய்யவும் தி.மு.க. அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில், 11-ந்தேதி அன்று காலை 10 மணியளவில் தம்பிக்கோட்டை முக்கூட்டு சாலை, த. வடகாடு த.கீழக்காடு சந்திப்பில், முன்னாள் அமைச்சரும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான ஆர். வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையிலும், திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் சிவநாராயணசாமி முன்னிலையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் சிவ நாராயணசாமி மேற்கொள்வார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×