என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் ஆலோசனை- முக்கிய முடிவுகளை வெளியிடுகிறார்
- எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தி அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்கு வியூகம் வகுப்பது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
- இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை ஓ.பன்னீர்செல்வம் விரிவாக வெளியிட உள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், நாங்களே உண்மையான அ.தி.மு.க. என்று தெரிவித்து வருகிறார்கள்.
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் நிலையில் அந்த பதவியில் ஓ.பன்னீர்செல்வம் இப்போதும் நீடிக்கிறார் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக செயல்படும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்களையும், மாநில நிர்வாகிகளையும் ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். 88 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகளும் ஓ.பன்னீர் செல்வம் அணியில் செயலாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதன்படி இன்று ஆலோசனை நடைபெற்றது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என மொத்தம் 200 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று ரித்தர்டன் சாலையில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கையெழுத்து போட்டு விட்டு அரங்கத்துக்குள் சென்றனர்.
அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியின் பெயரிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சட்டப் போராட்டம் நடத்தி வரும் அவர் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் பற்றி இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தினார்.
எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தி அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்கு வியூகம் வகுப்பது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை ஓ.பன்னீர்செல்வம் விரிவாக வெளியிட உள்ளார்.
இதற்கிடையே பண்ருட்டி ராமச்சந்திரனை, நேற்று நள்ளிரவு ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியும் வருகிற 27-ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். அந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்ட போராட்டங்கள் மற்றும் போட்டியை எதிர்கொள்வது எப்படி என்பது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.
அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இனி இடமே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஜனவரி 4-ந்தேதி நடைபெறுகிறது.
இந்த விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று நடத்தும் ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க.வில் விரிசல் ஏற்பட்டு பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் போட்டி கூட்டங்களை நடத்துவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்