search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சசிகலாவுடன் கைகோர்க்கும் ஓபிஎஸ்- நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு
    X

    சசிகலாவுடன் கைகோர்க்கும் ஓபிஎஸ்- நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு

    • எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் இந்த கூட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
    • அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து பயணிப்பதே நல்லது என்கிற கருத்தையும் அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

    சென்னை:

    ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்டமோதல் நீடித்துக் கொண்டே செல்கிறது.

    அ.தி.மு.க.வில் இருந்து பன்னீர்செல்வத்தை முழுமையாக ஓரம் கட்டி விட்டு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை தலைமையேற்று நடத்தி வருகிறார். இவரது இந்த தலைமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கூறி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வையே தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்க முடியாது என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

    ஓ.பன்னீர்செல்வத்தை போலவே சசிகலாவும் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டு தனித்து செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று கூறிக்கொண்டு சுற்றுப்பயணம் செய்து வரும் அவர் நிச்சயம் எனது தலைமையில் அ.தி.மு.க. ஓன்றுபடும் என்று தொடர்ந்து கூறிவருகிறார்.

    சசிகலாவின் இந்த சுற்றுப்பயணமும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை. அதே நேரத்தில் டி.டி.வி. தினகரனும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கி கட்சியை நடத்தி வருகிறார். இப்படி அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள இந்த மூன்று பேரையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்கிற குரல் எழுந்துள்ள போதிலும் எடப்பாடி அதனை கண்டு கொள்ளாமலேயே உள்ளார்.

    இந்த நிலையில்தான் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் எம்.பி.யாகி விடலாம் என்று கனவு கண்டார். அதுவும் பலிக்காமல் போய்விட்டது. இதன் காரணமாக அரசியலில் அவர் திசை தெரியாமல் பயணித்து வருவதாகவே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

    வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது தெரியவில்லை. சசிகலாவுடன் கைகோர்த்து அவர் செயல்பட இருப்பதாக கூறப்படுகிறது. சசிகலாவை விரைவில் சந்திப்பேன் ஓ.பி.எஸ். கூறியுள்ள நிலையில் நாளை மறுநாள் 26-ந்தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் முன்னணி நிர்வாகிகளின் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்டியுள்ளார். எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் இந்த கூட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

    அதில் செல்வம் தனது எதிர்காலம் பற்றி பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்தது போல வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அந்தக் கூட்டணியிலேயே நீடிக்க வேண்டும் என்பதே ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சிலரின் விருப்பமாக உள்ளது.

    அதே நேரத்தில் பா.ஜ.க.வுடனான இந்த பயணம் வெற்றி பயணமாக இருக்காது. அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து பயணிப்பதே நல்லது என்கிற கருத்தையும் அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வத்தை சேர்க்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருப்பதால் சசிகலாவுடன் கைகோர்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி முக்கிய முடிவுகளை பன்னீர்செல்வம் எடுக்க இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×