search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    O Panneer Selvam
    X

    கர்நாடக அரசுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு தி.மு.க. அழுத்தம் கொடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

    • கர்நாடக அரசிடம் பேசவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ தி.மு.க. முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது.
    • உரிமைக்கு குரல் கொடுக்காமல் மவுனம் சாதிப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு டெல்டா விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடியினை மேற்கொள்ளும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதும், ஜனவரி 28-ந்தேதி நீர்திறப்பு நிறுத்தப்படுவதும் வழக்கம். மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறைந்தபட்சம் 90 டி.எம்.சி. இருந்தால், ஜூன் மாதம் 12-ந்தேதி நீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

    இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற காவேரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில், ஜூலை 31-ந் தேதி வரை தினமும் ஒரு டி.எம்.சி. நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு ஒரு டி.எம்.சி. நீரைக்கூட திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது. கர்நாடக முதலமைச்சரின் இந்தப் பேச்சு உச்சநீதிமன்றத்தினை அவமதிப்பதாகும்.

    இருப்பினும், இது குறித்து கர்நாடக அரசிடம் பேசவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ தி.மு.க. முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது. 'உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்று சொல்லிக் கொண்டு, உரிமைக்கு குரல் கொடுக்காமல் மவுனம் சாதிப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.

    தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சருடன் உடனடியாக பேசி, காவேரி ஒழுங்காற்றுக் குழு வினுடைய உத்தரவினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்டுக கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×