search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜ.க. தலைவர்கள் மீது ஓ.பி.எஸ். கடும் அதிருப்தி: 20-ந்தேதி முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்
    X

    பா.ஜ.க. தலைவர்கள் மீது ஓ.பி.எஸ். கடும் அதிருப்தி: 20-ந்தேதி முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்

    • சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டு விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்காதது திட்டமிட்ட செயல் அல்ல.
    • தேர்தல் பிரசாரத்துக்கு ஓ.பன்னீர்செல்வதை அழைப்பதும், அழைக்காததும் எடப்பாடி பழனிசாமியின் முடிவு

    சென்னை:

    ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவுக்கு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து டி.ஜெயக்குமார் அழைக்கப்பட்டு இருந்தார்.

    ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று தொடர்ந்து கூறிவரும் ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்கவில்லை. இதனால் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீது ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிருப்தியில் இருப்பதாக அவரது ஆதரவு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தங்கள் தலைவர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு உரிய மரியாதை தரவில்லை என்று பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்கள்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை நிறுத்தினார். ஆனால் இரு தரப்பையும் சந்தித்து பேசி ஓ.பன்னீர்செல்வம் அணியை வாபஸ் பெற வைத்தார் அண்ணாமலை.

    இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தென்னரசுவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய போவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். ஆனால் எடப்பாடி தரப்பிலிருந்து யாரும் அவரை அழைக்கவில்லை.

    டெல்லி பா.ஜனதா தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தும் தமிழக பா.ஜனதா தன்னை கை விடுவதாக அதிருப்தியில் உள்ளார்.

    ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தும் அவரை அண்ணாமலை அப்படி அழைப்பதில்லை என்றும் அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று தேர்தல் ஆணையமோ அல்லது சுப்ரீம் கோர்ட்டோ அங்கீகரிக்காத நிலையில் அவரை மட்டும் இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்து வருவதாகவும் இது திட்டமிட்டு ஓ.பன்னீர்செல்வத்தை அவமதிப்பதாகவே நினைப்பதாக அவரது ஆதரவாளர்கள் குமுறுகிறார்கள்.

    20-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக பா.ஜனதா நிர்வாகிகள் கூறியதாவது:-

    இப்போது ஈரோட்டில் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் தான் கவனம் செலுத்த வேண்டும்.

    சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டு விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்காதது திட்டமிட்ட செயல் அல்ல. அப்படி பார்த்தால் எங்கள் கூட்டணியில் இருக்கும் மேலும் சில கட்சி தலைவர்களைகூட அழைக்கவில்லையே.

    தேர்தல் பிரசாரத்துக்கு ஓ.பன்னீர்செல்வதை அழைப்பதும், அழைக்காததும் எடப்பாடி பழனிசாமியின் முடிவு. அதேபோல் பிரசாரம் செய்வதும், செய்யாததும் ஓ.பன்னீர் செல்வத்தின் முடிவு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×