search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பங்குனி உத்திர திருவிழாவில் கலச பூஜையில்  வைக்கப்பட்ட ஒரு தேங்காய் விலை ரூ.30 ஆயிரம்
    X

    பங்குனி உத்திர திருவிழாவில் கலச பூஜையில் வைக்கப்பட்ட ஒரு தேங்காய் விலை ரூ.30 ஆயிரம்

    • தேனி மாவட்டம் போடியில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது.
    • கலசத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்த தேங்காய் பல ஆண்டுகள் ஆனாலும் கெடாது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், தைப்பூசம் உள்ளிட்ட விழாக்கள் வெகுசிறப்பாக நடைபெறும். அதன்படி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வள்ளி, முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து திருமண வேள்வி கலசத்தில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. ரூ.3 ஆயிரத்தில் தொடங்கப்பட்ட இந்த ஏலம் படிப்படியாக உயர்த்தி பக்தர்களால் ஏலம் கேட்கப்பட்டது. இறுதியில் ரூ.30ஆயிரத்திற்கு பக்தர் ஒருவர் அந்த தேங்காயை ஏலம் எடுத்தார்.

    கலசத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்த தேங்காய் பல ஆண்டுகள் ஆனாலும் கெடாது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த தேங்காயை வீட்டில் வைத்து பூஜித்தால் திருமணத்தடை, தொழில் விருத்தி, சகலஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் இந்த தேங்காய் ஏலம் எடுப்பதில் கடுமையான போட்டி ஏற்பட்டது.

    கடந்த கந்தசஷ்டி விழாவில் இதேபோல் ஏலம் விடப்பட்ட தேங்காய் ரூ.65 ஆயிரத்திற்கு பக்தர் ஒருவர் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கந்தசஷ்டி விழாவில் முருகன், தெய்வாணை திருமணம் பகலிலும், பங்குனி உத்திர திருவிழாவில் முருகன், வள்ளி திருமணம் இரவிலும் நடைபெறக்கூடியது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருமணத்திற்கு வந்ததுபோல் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டு சென்றனர்.

    Next Story
    ×