search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக பா.ஜ.க. வேட்பாளர்களை தேர்வு செய்ய அமித்ஷா - ஜே.பி.நட்டா விடிய விடிய ஆலோசனை
    X

    தமிழக பா.ஜ.க. வேட்பாளர்களை தேர்வு செய்ய அமித்ஷா - ஜே.பி.நட்டா விடிய விடிய ஆலோசனை

    • கூட்டணி நிலவரங்கள், புதிதாக எந்ததெந்த கட்சிகள் வரவாய்ப்பு என்பது பற்றி விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
    • டி.டி.வி.தினகரன் 4 தொகுதிகள் கேட்டு இருப்பது, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட தயங்குவது பற்றியும் விவாதித்து இருக்கிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தோ்தலையொட்டி, பா.ஜ.க. வேட்பாளா்களை தோ்வு செய்வது குறித்து தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளிடமும், கடந்த 5-ந்தேதி மூத்த நிா்வாகிகளிடமும் செவ்வாய்க்கிழமை கருத்துக்கேட்டு பட்டியல் தயாரித்தனா்.

    இந்தப் பட்டியல் குறித்து சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவா் அண்ணாமலை ஆகியோா் ஆலோசனை நடத்தினா்.

    மூத்த நிா்வாகிகள் முன்னிலையில் தயாரிக்கப்பட்ட பட்டியலுடன் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் டெல்லிக்குச் சென்று பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாஆகியோரை சந்தித்து ஆலோசிக்க போவதாக கூறிவிட்டு அண்ணாமலை தலைமையிலான குழுவினர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

    தமிழக வேட்பாளர்கள் பட்டியலுடன் டெல்லியில் அமித்ஷா, நட்டா ஆகியோரை அண்ணாமலை சந்தித்தார். இதையடுத்து அமித்ஷாவும், நட்டாவும் தமிழக குழுவினருடன் விடிய விடிய ஆலோசனை நடத்தினார்கள்.

    அப்போது கூட்டணி நிலவரங்கள், புதிதாக எந்ததெந்த கட்சிகள் வரவாய்ப்பு என்பது பற்றி விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.


    டி.டி.வி.தினகரன் 4 தொகுதிகள் கேட்டு இருப்பது, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட தயங்குவது பற்றியும் விவாதித்து இருக்கிறார்கள்.

    இன்னும் எந்த கூட்டணியும் முழுமை அடையாமல் இழுபறியான நிலையே நீடிப்பதால் பா.ஜனதா தரப்பிலும் வேட்பாளர் அறிவிப்பில் குறைந்த எண்ணிக்கையில் அதாவது பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை முதலில் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

    அதன்படி 8 தொகுதிகள் வரை அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    தமிழகத்தில் வேட்பாளர்கள் தேர்வில் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கவும் திட்டமிட்டுள்ளார்கள். வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நடிகை குஷ்பு, டாக்டர் ஆனந்த பிரியா, டாக்டர் காயத்ரி, சுமதி வெங்கடேஷ், மகா லெட்சுமி, கார்த்தியாயினி, உமாரதி ஆகிய பெண் நிர்வாகிகள் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

    பெரிய அளவில் கூட்டணி அமையாமல் பா.ஜனதா தேர்தலை சந்தித்தால் குறைந்த பட்சம் 7 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×