search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை: தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு
    X

    கோப்புப்படம்

    நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை: தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

    • ஒவ்வொரு மையத்திலும் இணை ஆணையர் ஒருவரின் மேற்பார்வையில் 3 துணை கமிஷனர்கள், 10 உதவி கமிஷனர்கள் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    • காலை 6 மணிக்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு போலீசார் சென்று விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (4-ந்தேதி) எண்ணப்படுகிறது.

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளில் பதிவான ஓட்டுகளும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் தலா 1000 போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க உள்ளனர்.

    இதன் மூலம் வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஆயுதப்படை போலீசார், சிறப்பு காவல் படை போலீசார் ஆகியோரும் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    துப்பாக்கி ஏந்திய 15 கம்பெனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட உள்ளனர். இதன் மூலம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

    வாக்கு எண்ணும் மையங்களை தவிர்த்து மற்ற இடங்களில் சுமார் 60 ஆயிரம் போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், பொது இடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இதன் மூலம் மாநிலம் முழுவதும் நாளை மறுநாள் நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் வாக்குகள் எண்ணப்படும் அண்ணா பல்கலைக்கழகம், ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி ஆகிய 3 மையங்களிலும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    ஒவ்வொரு மையத்திலும் இணை ஆணையர் ஒருவரின் மேற்பார்வையில் 3 துணை கமிஷனர்கள், 10 உதவி கமிஷனர்கள் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். காலை 6 மணிக்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு போலீசார் சென்று விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணிக்கை முடிந்து மையங்களில் பரபரப்பு அடங்கி இயல்பு நிலை திரும்பிய பிறகே போலீசார் மையங்களை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    Next Story
    ×