search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மதுரையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர்கள் உள்பட 2000 பேர் மீது வழக்கு
    X

    மதுரையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர்கள் உள்பட 2000 பேர் மீது வழக்கு

    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், அ.ம.மு.க. நிர்வாகி ராஜேஸ்வரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    மதுரை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் மதுரைக்கு வந்தார். அப்போது அ.ம.மு.க. நிர்வாகி ராஜேஸ்வரன் என்பவர் மதுரை விமான நிலையத்தில் வீடியோ எடுத்து அவதூறாக பேசினார்.

    இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராஜேஸ்வரனுக்கு அடி-உதை விழுந்தது. இதுபற்றி அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அதே சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், அ.ம.மு.க. நிர்வாகி ராஜேஸ்வரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு போலீசாரிடம் உரிய அனுமதி பெறவில்லை. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காத நிலையில் அ.தி.மு.க.வினர், மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய வந்தனர்.

    அப்போது போலீசார் தடுத்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை, அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். இருந்தபோதிலும் அ.தி.மு.க.வினர் கலைந்து செல்லாமல் போலீசாரின் தடையையும் மீறி அ.தி.மு.க.வினர் ஆர்பாட்டம் செய்தனர்.

    இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் அன்புதாசன், சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார், அ.தி.மு.க. மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், பகுதி செயலாளர்கள் முத்துவேல், கருப்பசாமி, மாவட்ட கவுன்சிலர் மற்றும் 500 பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×