search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தேனியில் தலைமைஆசிரியரை தாக்கிய பள்ளி தாளாளர் மீது வழக்கு
    X

    தலைமை ஆசிரியரை பள்ளி தாளாளர் தாக்கும் வீடியோ காட்சி.

    தேனியில் தலைமைஆசிரியரை தாக்கிய பள்ளி தாளாளர் மீது வழக்கு

    • தேனி மாவட்டம் எஸ்.பியும், நகர் போலீசாரும் தலைமை ஆசிரியர் சென்றாயபெருமாளிடம் விசாரணை நடத்தி புகார் மனு பெற்றனர்.
    • கடந்த ஜனவரி 18-ந்தேதி தாளாளர் அன்பழகன் தன்னையும், சக ஆசிரியையான சுமதியையும் பள்ளியை விட்டு வெளியேறும்படி கொலைமிரட்டல் விடுத்ததாக சென்றாயபெருமாள் குறிப்பிட்டுள்ளார்.

    தேனி:

    தேனி சுப்பன்தெருவில் மகாராஜா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் மேல்தளத்தில் செவித்திறன் குறைபாடு உடைய சிறுவர்களுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கான வாடகையை பள்ளி தாளாளர் அன்பழகன்(55) பெற்று வந்துள்ளார்.

    இந்தநிலையில் இந்த மாதத்திற்கான வாடகை பணத்தை தருமாறு தாளாளர் பள்ளியின் தலைமை ஆசிரியர் சென்றாயபெருமாளிடம் கேட்டுள்ளார். வாடகை பணத்தை பள்ளியின் மின்சார கட்டணத்திற்கு பயன்படுத்தி விட்டதாக தலைமை ஆசிரியர் பதில் அளித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் தலைமை ஆசிரியரை பள்ளி தாளாளர் மாணவ-மாணவிகள் முன்பு தாக்கினார். இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதனைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவின்பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    மேலும் தேனி மாவட்டம் எஸ்.பியும், நகர் போலீசாரும் தலைமை ஆசிரியர் சென்றாயபெருமாளிடம் விசாரணை நடத்தி புகார் மனு பெற்றனர். அதில் கடந்த ஜனவரி 18-ந்தேதி தாளாளர் அன்பழகன் தன்னையும், சக ஆசிரியையான சுமதியையும் பள்ளியை விட்டு வெளியேறும்படி கொலைமிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் அன்பழகன் சென்றாயபெருமாளை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். மேலும் பள்ளிக்கு பூட்டுபோட்டுவிட்டு அங்கிருந்து சென்றார். போலீசார் வழக்குபதிவு செய்ததை தொடர்ந்து அன்பழகன் தலைமறைவாகிவிட்டார். இந்த பள்ளி மாணவர்களை தேனி பங்களாமேடு அருகே பழைய உதவி தொடக்க கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள அரசு பள்ளியில் வைத்து பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாணவர்கள் முழுஆண்டு தேர்வை எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியை மூடச்சொல்லி ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையால் பள்ளிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வேறு பள்ளியில் பணி வழங்கப்படும். மாணவர்களை அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×