search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளத்தை வெளியேற்ற தோண்டிய பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்
    X

    வெள்ளத்தை வெளியேற்ற தோண்டிய பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

    • கடைகளில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன.
    • பள்ளத்தை உடனே மூடி இந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் ஏற்பட்ட புயல் மழை காரணமாக கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து 2 நாட்கள் பெய்த பலத்த மழையால் சூளைமேடு பகுதியில் பல தெருக்களை வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக அண்ணா நெடும்பாதை, நேரு தெரு, 3-வது சந்து, சுப்பராயன் தெரு, ஆண்டவர் தெரு, ராஜ வீதி, பெரியார் பாதை உள்ளிட்ட பல தெருக்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து 4 நாட்கள் வரை தேங்கி நின்றது. பல வீடுகளில் சுமார் 6 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    மேலும் அண்ணா நெடும்பாதையில் உள்ள பல கடைகளுக்குள்ளேயும் இடுப்பளவுக்கு தண்ணீர் புகுந்து 2 நாட்கள் தேங்கி நின்றது. இதனால் கடைகளில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. இது மார்க்கெட் பகுதி என்பதால் மளிகை கடைகள், காய்கறி கடைகள், துணிக்கடைகள், இறைச்சி கடைகள், மருந்து கடைகள், ஆஸ்பத்திரி வளாகம் என பல கடைகளிலும் தண்ணீர் புகுந்தது. இந்த பகுதிகளில் தேங்கிய தண்ணீர் மோட்டார் மூலம் அகற்றப்பட்டது.

    நேரு தெருவில் 4 நாட்களாக வெள்ளம் வடியாததால் ராட்சத மோட்டார் மூலம் வெள்ளத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக அண்ணா நெடும்பாதை நேரு தெரு சந்திப்பில் சாலை ஓரத்தில் உள்ள மழைநீர் கால்வாயை உடைத்து பெரிய அளவில் பள்ளம் தோண்டி தண்ணீரை அகற்றும் பணி நடந்தது.

    அந்த பகுதியில் தண்ணீரை வெளியேற்றிய பிறகு சாலை ஓரத்தில் உள்ள பெரிய பள்ளத்தை மூடாமல் ஊழியர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த பள்ளத்தாலும், அதில் தோண்டிய மண்ணை சாலை ஓரத்திலேயே போட்டு வைத்திருப்பதாலும் அண்ணா நெடும்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    மேலும் இது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பள்ளத்தை உடனே மூடி இந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

    Next Story
    ×