search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    துடியலூர் அருகே லாரி மோதி ரெயில்வே கேட்- சிக்னல் கம்பம் சேதம்
    X

    ரெயில்வே கேட் உடைந்த இடத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதையும், ரெயில் அந்த பகுதியை கடந்து சென்றதையும் படத்தில் காணலாம்.

    துடியலூர் அருகே லாரி மோதி ரெயில்வே கேட்- சிக்னல் கம்பம் சேதம்

    • மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு பயணிகள் ரெயில் புறப்பட தயாராகி இருந்தது.
    • 2 ரெயில்களும் சென்ற பிறகு, ரெயில்வே ஊழியர்கள் உடைந்த ரெயில்வே கேட் மற்றும் சிக்னல் கம்பத்தை சரி செய்யும் பணியை தொடங்கினர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை-மேட்டுப்பாளையம் ரெயில்வே வழித்தடத்தில் துடியலூர் வெள்ளகிணர் பிரிவில் இருந்து உருமாண்டம்பாளையம் செல்லும் வழியில் ரெயில்வே கேட் உள்ளது.

    இந்த வழியாக நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரெயில்கள், நெல்லை-மேட்டுப்பாளையம் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் நேற்று இரவு உருமாண்டம்பாளையம் ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து சரவணம்பட்டிக்கு ஒரு லாரி வந்தது. லாரி, வெள்ளக்கிணறு ரெயில்வே கேட்டை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக கேட்டின் மீது மோதியது.

    இதில் ரெயில்வே கேட்டின் சிக்னல் கம்பம் உடைந்தது, அத்துடன் ரெயில்வே கேட்டும் பாதி உடைந்து, அதில் இருந்து தீப்பொறிகள் கிளம்பியது. இதை அங்கிருந்த ரெயில்வே ஊழியர்கள் பார்த்து, அதிர்ச்சியாகினர்.

    உடனடியாக அந்த கேட்டுக்கான அனைத்து லைன்களையும் துண்டித்தனர். மேலும் இதுகுறித்து மேட்டுப்பாளையம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு பயணிகள் ரெயில் புறப்பட தயாராகி இருந்தது.

    ரெயில்வே கேட் உடைந்த சம்பவம் குறித்து அங்கு தெரிவிக்கப்பட்டதால், உடனடியாக ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தற்காலிகமாக உடைந்த ரெயில்வே கேட் பகுதியில் உடைந்த கம்பங்களை எடுத்து வைத்து வாகனங்கள் ரெயில்வே கேட்டை கடந்துவிடாத வண்ணம் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    அதன்பிறகு அங்கிருந்து மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்து, ரெயிலை இயக்கி வரும்படி அறிவுறுத்தினர்.

    இதையடுத்து ஒரு மணி நேரம் தாமதமாக மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரெயில் புறப்பட்டு கோவை வந்தது. சம்பவ இடமான வெள்ளக்கிணர் பிரிவின் அருகே வந்த போது ரெயிலை மெதுவாக இயக்கி வந்தனர். இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து 10 மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் புறப்பட்டு சென்றது.

    2 ரெயில்களும் சென்ற பிறகு, ரெயில்வே ஊழியர்கள் உடைந்த ரெயில்வே கேட் மற்றும் சிக்னல் கம்பத்தை சரி செய்யும் பணியை தொடங்கினர். இரவோடு, இரவாக பணிகளை துரிதப்படுத்தி, ரெயில்வே கேட் மற்றும் சிக்னல் கம்பம் சரி செய்யப்பட்டது.

    ரெயில்வே கேட் மீது லாரி மோதிய விவகாரத்தில் லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

    Next Story
    ×