search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கோவை பாராளுமன்ற தொகுதியில் ரஜினியின் மருமகன் போட்டி?
    X

    கோவை பாராளுமன்ற தொகுதியில் ரஜினியின் மருமகன் போட்டி?

    • பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே கமல்ஹாசன் தோல்வியை தழுவினார்.
    • கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தீவிர தேர்தல் பணியையும் மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தாங்கள் போட்டியிட உள்ள தொகுதிகளை கேட்டு பெறுவதில் தீவிரமாக உள்ளன. தி.மு.க. தொகுதி பங்கிட்டு குழுவினருடன் கூட்டணி கட்சிகள் நடத்திய முதல் கட்ட பேச்சு வார்த்தையில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கி உள்ளன.

    அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருப்பதாக கருதப்படும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இதுவரை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் அனுப்பப்படாமலேயே உள்ளது. இருப்பினும் கோவை தொகுதியை குறிவைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் காய் நகர்த்தி வருகிறார்கள். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் கோவை தொகுதியில் கணிசமான வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. இதையடுத்து கோவை தொகுதியில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று கமல்ஹாசன் நம்புகிறார். இதற்காகவே மக்கள் நீதி மய்யம் கட்சி கோவை தொகுதியை கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது இன்னும் உறுதியாகாத நிலையில் கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தீவிர தேர்தல் பணியையும் மேற்கொண்டுள்ளனர்.

    இப்படி கோவை தொகுதியில் கமல் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தி.மு.க. சார்பில் அங்கு நடிகர் ரஜினிகாந்தின் மருமகனை வேட்பாளராக களம் இறக்கலாமா? என்பது பற்றி கட்சி தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பல்லடம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பொன்முடியின் குடும்ப வாரிசு தான் ரஜினியின் மருமகனான விசாகன் ஆவார். பொன்முடியின் தம்பியான வணங்காமுடியின் மகன்தான் விசாகன். இவர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவை திருமணம் செய்து உள்ளார்.



    தி.மு.க. குடும்பத்தில் இருந்து வந்தவர் என்ற முறையிலும் ரஜினியின் மருமகன் என்கிற முறையிலும் பாராளுமன்றத் தேர்தலில் அவரை களம் இறக்கினால் நிச்சயம் வெற்றி உறுதி என்று தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள். அதுபோன்று விசாகனை பாராளுமன்ற தேர்தல் களத்தில் நிறுத்தினால் ரஜினி ரசிகர்களும் அவரது வெற்றிக்காக உழைப்பார்கள். அனைத்து தரப்பு மக்களின் ஓட்டுகளும் கிடைக்கும் என்பது தி.மு.க.வினர் போடும் திட்டமாகவும் உள்ளது. கொங்கு மண்டலத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க.வே செல்வாக்கு மிகுந்ததாக காணப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். இது போன்ற சூழலில் கோவை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று நிச்சயம் தங்களது செல்வாக்கையும் காட்ட தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அதற்கு பரிச்சயமான ஒருவரை நிறுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று அந்த கட்சி கணக்கு போட்டுள்ளது. இதன் காரணமாகவே ரஜினியின் மருமகன் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்கிற தகவல் கோவை தொகுதியில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×