search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் இருந்து மதுரை வரை ராமதாஸ் 8 நாட்கள் பிரசாரம்
    X

    சென்னையில் இருந்து மதுரை வரை ராமதாஸ் 8 நாட்கள் பிரசாரம்

    • தமிழ் இசைக்கு இடமில்லை. அதை வளர்ப்பதற்கான அமைப்புகள் உருவாக்கப்படவில்லை.
    • தமிழ் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் வேகம் பெறவில்லை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 'எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்' என்பது தான் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் நிலைப்பாடும், எதிர்பார்ப்பும் ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் 'எங்கே தமிழ்?' என்பது தான் எதார்த்தம்.

    அனைத்துப் பள்ளிகளிலும் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் தான் கட்டாயப் பயிற்றுமொழி என்று 23 ஆண்டுகளுக்கு முன் அரசாணை பிறப்பிக்கப்பட்டும் கூட தமிழ் இன்னும் பயிற்றுமொழி ஆகவில்லை.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் கூட தமிழ் இன்னும் உயர்நீதிமன்ற அலுவல் மொழி ஆகவில்லை. 1956-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.

    தமிழ்நாடு அரசின் அரசாணைகளில் முழுமையாக தமிழ் இல்லை. ஆலயங்களில் தமிழ் ஒற்றை வழிபாட்டு மொழியாகவில்லை. சமஸ்கிருதத்தில் மட்டும் தான் வழிபாடு நடத்தப்படுகிறது. சில ஆலயங்களில் மட்டும் வலியுறுத்திக் கேட்டால் கூடுதலாக தமிழில் வழிபாடு செய்யப்படுகிறது.

    தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக 1983-ம் ஆண்டு முதல் 3 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டும் கூட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழுக்கு உரிய இடம் இல்லை.

    அன்றாட வாழ்வில் தமிழ் இல்லை. பெரும்பான்மையான வீடுகளில் அம்மா, அப்பா என்ற சொற்களே புழக்கத்தில் இல்லை. மம்மி, டாடி மட்டும் தான் புழக்கத்தில் உள்ளன.

    தமிழ் இசைக்கு இடமில்லை. அதை வளர்ப்பதற்கான அமைப்புகள் உருவாக்கப்படவில்லை.

    தமிழ் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் வேகம் பெறவில்லை.

    உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இருக்கைகள் ஏற்படுத்தப்படவில்லை.

    இருளை பழிப்பதை விட விளக்கை ஏற்றுவது தான் சிறந்த செயல். அதனால் தான் தமிழ்நாட்டில் தமிழுக்கு உரிய இடத்தை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக போராடி வருகிறேன்.

    கடந்த 2004-ம் ஆண்டில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கி தமிழ் வளர்ச்சிக்காக பல ஆண்டுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், போராட்டங்களையும் மேற்கொண்டேன். ஆனால், தமிழுக்கு இன்னும் உரிய இடமும், மரியாதையும் வழங்கப்படாத நிலையில், மீண்டும் இயக்கம் நடத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

    தமிழ்நாட்டில் தமிழ் மொழி தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி, 'தமிழைத் தேடி' என்ற தலைப்பில் பரப்புரை பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.

    உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ம் நாள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தொடங்கும் இந்த பரப்புரை பயணம் மதுராந்தகம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், திருச்சி, திண்டுக்கல் வழியாக சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் வரும் பிப்ரவரி 28-ம் நாள் நிறைவடையும்.

    தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்வித்துறை, கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் 'தமிழைத் தேடி' பரப்புரை பயணத்தில் பங்கேற்று ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×