search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    8 தமிழர்கள் தாய்லாந்தில் சிறைபிடிப்பு- மீட்க கோரி ராமதாஸ் அறிக்கை
    X

    8 தமிழர்கள் தாய்லாந்தில் சிறைபிடிப்பு- மீட்க கோரி ராமதாஸ் அறிக்கை

    • கைதாகியுள்ள தமிழர்கள் குற்றவாளிகள் அல்ல அவர்களை பாதிக்கப்பட்டவர்களாகவே பார்க்க வேண்டும்.
    • பணம், உழைப்பு, நிம்மதி, எதிர்காலம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து நிற்கும் அவர்களை ரூ.43,500 அபராதம் செலுத்தும்படி தாய்லாந்து அரசு கட்டாயப்படுத்துவது நியாயமல்ல.

    சென்னை:

    இந்தியாவில் இருந்து தமிழர்கள் உள்பட பலர் தாய்லாந்துக்கு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மூலம் வேலைக்கு சென்றனர். அங்கு அவர்களை மோசடி கும்பல் மியான்மாருக்கு கடத்தி சென்று சட்டவிரோத செயலில் மிரட்டி ஈடுபட வைத்தது.

    இது குறித்து தகவல் வெளியானதையடுத்து மோசடி கும்பலிடம் சிக்கி உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் மீட்கப்பட்டு நாடு திரும்பினர்.

    இந்த நிலையில் மோசடி கும்பலுக்கு மியான்மர் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து 8 தமிழர்கள் உள்பட சிலரை மோசடி கும்பல் துப்பாக்கி முனையில் மியான்மரில் இருந்து தாய்லாந்துக்கு படகு மூலம் கடத்தி சென்றுள்ளது. இது தொடர்பாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

    இதற்கிடையே முறையான விசா இல்லாததால் தமிழர்களை தாய்லாந்து போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    மியான்மரில் சட்ட விரோத கும்பலிடம் இருந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீண்ட தமிழகத்தைச் சேர்ந்த 8 பேரும், கேரளத்தைச் சேர்ந்த ஒருவரும் தாய்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. கைதாகியுள்ள தமிழர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர்களின் விசா காலாவதியாகிவிட்டது என்பது தான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு. குறுகிய கால விசாவில் சென்றவர்கள் சட்டவிரோத கும்பலிடம் சிக்கிக் கொண்டதால் தான் விசா காலத்தை அவர்களால் நீட்டிக்க முடியவில்லை.

    கைதாகியுள்ள தமிழர்கள் குற்றவாளிகள் அல்ல அவர்களை பாதிக்கப்பட்டவர்களாகவே பார்க்க வேண்டும். பணம், உழைப்பு, நிம்மதி, எதிர்காலம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து நிற்கும் அவர்களை ரூ.43,500 அபராதம் செலுத்தும்படி தாய்லாந்து அரசு கட்டாயப்படுத்துவது நியாயமல்ல.

    சட்டவிரோத கும்பலிடம் சிக்கிய அவர்களின் நிலை தெரியாமல் தவிக்கும் குடும்பத்தினரின் மன உளைச்சலை மேலும் அதிகரிக்கக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தலையிட்டு தாய்லாந்தில் சிறை பிடிக்கப்பட்டுள்ள 8 தமிழர்கள் உள்ளிட்ட 9 பேரையும் உடனடியாக மீட்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×