search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பணி நீக்கத்தை ரத்து செய்து விட்டு செவிலியர்களுக்கு பணி வழங்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
    X

    பணி நீக்கத்தை ரத்து செய்து விட்டு செவிலியர்களுக்கு பணி வழங்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

    • பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் எந்த வகையிலும் தகுதி, திறமை குறைந்தவர்கள் அல்ல.
    • அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை நிலவுகிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக அமர்த்தப்பட்ட 2400 செவிலியர்கள் இன்று முதல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உயிரை பணயம் வைத்து பணியாற்றி வந்த செவிலியர்களை பணிநீக்கியிருப்பது நியாயமல்ல.

    பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் எந்த வகையிலும் தகுதி, திறமை குறைந்தவர்கள் அல்ல. பணி நிலைப்பு செய்வதற்கான அனைத்து தகுதிகளும் அவர்களுக்கு உள்ளன. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் அறிவிக்கையின் மூலம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் மூலமாக இட ஒதுக்கீடு, வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி தான் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை நிலவுகிறது. 3,600-க்கும் கூடுதலான செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, மிகவும் ஆபத்தான கொரோனா பெருந்தொற்று காலத்தில் செவிலியர்கள் பணியாற்றியதை கருத்தில் கொண்டும், தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்குடன் அவர்களின் பணி நீக்க ஆணையை ரத்து செய்து விட்டு, அவர்களை காலியாக உள்ள இடங்களில் அமர்த்தி பணி நிலைப்பு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×