search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றே தீருவோம்- தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
    X

    வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றே தீருவோம்- தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

    • மருத்துவக் கல்வி, பொறியியல் படிப்பு, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைகளில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு இல்லை.
    • கடந்த 10 மாதங்களில் அறிவிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளிலும் வன்னியர் இடஒதுக்கீடு இல்லை என்ற உங்களின் கவலைக்குரல்கள் என் காதுகளை எட்டாமல் இல்லை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டு, சமுதாய படிநிலையின் அடித்தட்டில் தள்ளப்பட்ட பாட்டாளி மக்கள், தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைக் கேட்டு போராடியதற்காக காவல்துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டதன் 35-வது நினைவு நாள் நாளை.

    இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் ஈடு இணையற்ற தியாகம் செய்த, காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகளை துணிச்சலுடன் மார்பில் தாங்கிய இடஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகள் 21 பேருக்கும் நான் எனது வீரவணக்கங்களை செலுத்துகிறேன்.

    2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது.

    அதன்பின் ஆட்சிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அந்த இடஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வந்தது.

    ஆனால் 50 அமைப்புகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. நீதிமன்றம் வழக்கை விசாரித்து வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்று தீர்ப்பளித்தது.

    வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நானே மேல்முறையீடு செய்தேன். தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வன்னியர் ஒட ஒதுக்கீட்டுக்கு மீண்டும் உயிர்கொடுக்க போராடியது.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்தவித தடையும் இல்லை; அதற்கான சட்டத்தை நிறைவேற்றலாம் என்று உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டி விட்டது.

    உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஐந்தரை மாதங்கள் கடந்து விட்டன. மருத்துவக் கல்வி, பொறியியல் படிப்பு, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைகளில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு இல்லை. கடந்த 10 மாதங்களில் அறிவிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளிலும் வன்னியர் இடஒதுக்கீடு இல்லை என்ற உங்களின் கவலைக்குரல்கள் என் காதுகளை எட்டாமல் இல்லை.

    கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னிய சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற வேட்கையின் காரணமாகத் தான் 21 தியாகிகள் ஒரே போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்தனர். அவர்கள் சிந்திய ரத்தம் ஒருபோதும் வீண் போகாது. வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை எப்பாடுபட்டாவது வெகுவிரைவில் வென்றெடுத்தே தீருவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×