search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சசிகலா-ஓ.பன்னீர்செல்வம் ரகசியமாக சந்திப்பு?: அ.தி.மு.க. தலைவர்களை சிக்க வைக்க திட்டம்
    X

    சசிகலா-ஓ.பன்னீர்செல்வம் ரகசியமாக சந்திப்பு?: அ.தி.மு.க. தலைவர்களை சிக்க வைக்க திட்டம்

    • கடந்த சில நாட்களாகவே ஓ.பன்னீர்செல்வம் பாரதிய ஜனதாவில் சேரப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது.
    • இதை ஓ.பன்னீர்செல்வமும் மறுக்கவில்லை. பா.ஜனதா கட்சியும் மறுக்கவில்லை. இதனால் தகவல் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்று விட்டால் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற நிலை உறுதியாகிவிடும். அரசியலில் ஓ.பன்னீர் செல்வம் தனி மரமாகி விடுவார். எனவே அவர் தேர்தல் கமிஷன், கோர்ட்டு, போலீஸ் என பல வகைகளிலும் போராடி வருகிறார்.

    சட்ட விதிகளின்படி ஓ.பன்னீர்செல்வத்துக்கு வெற்றி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அப்படி வெற்றி கிடைக்காத சூழ்நிலையில் அவர் அரசியலில் வேறொரு முடிவு எடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளார்.

    இதை பயன்படுத்தி சில அரசியல் கட்சிகள் அவரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. கடந்த சில நாட்களாகவே அவர் பாரதிய ஜனதாவில் சேரப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதை ஓ.பன்னீர்செல்வமும் மறுக்கவில்லை. பா.ஜனதா கட்சியும் மறுக்கவில்லை. இதனால் தகவல் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

    இதற்கிடையே சசிகலா குடும்பத்தை சேர்ந்த சிலர் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் தங்கள் வளையத்துக்குள் கொண்டு வரும் முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. அதில் எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்பது தெரியவில்லை.

    இந்த நிலையில் இன்னொரு தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது. உங்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும். போயஸ் கார்டன் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தாக தெரிகிறது.

    இந்த விருந்தின்போது சசிகலாவும் வருவார். நீங்கள் சந்தித்து பேசுங்கள். கட்சியில் நீங்கள் இணைந்து செயல்பட்டால்தான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அரசியல் செய்ய முடியும். அ.தி.மு.க. அல்லது ஜெயலலிதா பெயரில் புதிய இயக்கம் தொடங்கி எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்க வேண்டும். அப்போதுதான் அ.தி.மு.க. முழுவதையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று பேசியதாக தெரிகிறது.

    ஆனால் இந்த தகவலை ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. இந்த விருந்துக்கு அவர் போவாரா? என்பதும் தெரியவில்லை. இருந்தாலும் சசிகலாவையும் ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்திக்க வைக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் இருவரும் சேர்ந்து அ.தி.மு.க. தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் சொத்துக்கள் குவித்ததாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் செய்து அவர்களை சிக்க வைக்க முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×