search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அமித்ஷாவை சந்தித்து பேசி சிக்கலை தீர்க்க சசிகலா முடிவு?
    X

    அமித்ஷாவை சந்தித்து பேசி சிக்கலை தீர்க்க சசிகலா முடிவு?

    • பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்று சேர்ப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறி வந்த சசிகலா தன்னால் முடியாததால் வேறு வழியை கையில் எடுத்துள்ளார்.
    • டெல்லி சென்று பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேச சசிகலா திட்டமிட்டுள்ளார்.

    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்களும், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு செல்ல நேர்ந்ததாலும் அ.தி.மு.க. சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவியது.

    எடப்பாடி பழனிசாமி தலைமையின்கீழ் அ.தி.மு.க. வந்தது. ஜெயிலில் இருந்து விடுதலையான பிறகும் அ.தி.மு.க.வில் இணைந்து தலைமைப் பதவிக்கு வந்து விட வேண்டும் என்ற சசிகலாவின் எண்ணம் ஈடேறவில்லை.

    இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் தொடங்கிய அ.ம.மு.க.வில் சசிகலாவுக்கு தலைவர் பதவியை கொடுக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் சசிகலா அதை ஏற்கவில்லை. அ.ம.மு.க.வுக்கு சென்று விட்டால் அதன்பிறகு அ.தி.மு.க.வுக்குள் செல்ல முடியாது என்பதாலேயே சசிகலா டி.டி.வி.தினகரனின் வேண்டுகோளை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் இப்போது அ.ம.மு.க. தலைவர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்க டி.டி.வி. தினகரன் தயாராகிவிட்டார்.

    தினகரனும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்தால் முக்குலத்தோர் வாக்குகளை பிரிப்பார்கள். அதை ஈடுகட்ட தன்னை அ.தி.மு.க. வுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பார் என்று சசிகலா எதிர்பார்த்தார். அதற்காகவே வைத்திலிங்கம் வீட்டு திருமணத்துக்கு செல்வதை கூட தவிர்த்தார் என்கிறார்கள். ஆனால் எடப்பாடி தரப்பில் இருந்து அதற்கான சமிக்ஞை எதுவும் கிடைக்காதது சசிகலாவை அதிருப்தி அடைய செய்துள்ளது.

    சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகிய 3 பேரையும் சேர்ப்பதில்லை என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.

    எனவே இதுவரை பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்று சேர்ப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறி வந்த சசிகலா தன்னால் முடியாததால் வேறு வழியை கையில் எடுத்துள்ளார்.

    அதாவது டெல்லி சென்று பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

    அ.தி.மு.க.வில் நிலவும் இந்த சிக்கல்களுக்கு அமித்ஷா மூலம் தீர்வு காண அவர் முடிவு செய்து உள்ளார்.

    ஏற்கனவே பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும். அதுதான் கூட்டணிக்கு பலம் என்பதில் தீவிரமாக இருக்கிறார் அமித்ஷா. இந்த சூழ்நிலையில் சசிகலாவின் வேண்டுகோளை ஏற்று இணைப்புக்கான முயற்சியில் அவர் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×