search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியின் படி இந்தியாவில் வளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை- செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
    X

    பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியின் படி இந்தியாவில் வளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை- செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    • எந்த புள்ளி விவரத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிற பா.ஜ.க.வினர், ஐ.நா. சபை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கைக்கு என்ன பதில் கூறப் போகிறது?
    • அவலநிலை நீடிக்குமேயானால் நாட்டு மக்களின் கடும் கோபத்திற்கு பா.ஜ.க. ஆட்சியாளர்கள் சந்திக்க நேரிடும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2014, 2019 பாராளுமன்ற தேர்தல் பரப்புரைகளின் போது 2024-ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் கோடி டாலராக உயர்த்துவதோடு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்கில் உறுதி செய்வோம் என்று பிரதமர் மோடி வாக்குறுதி வழங்கினார்.

    கடந்த 10 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் அவர் கொடுத்த வாக்குறுதியின்படி இந்தியாவில் வளர்ச்சி ஏற்படவில்லை. தற்போது உலக நாடுகளில் இந்திய பொருளாதாரம் 5-வது இடத்தில் இருப்பதாகவும், அதை மூன்றாவது இடத்திற்கு கொண்டு வருவோம் என்றும் பேசி வருகிறார்.

    இந்தியாவை பொருளாதார வல்லரசாக உயர்த்துவேன் என்று மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டின் அடிப்படையில் பேசுகிற பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களின் வாழ்க்கை தரமும், மனிதவளமும் குன்றி வறுமையின் கோரப்பிடியில் எந்த அளவிற்கு சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஐ.நா. சபையின் தரவரிசை பட்டியல் அம்பலப்படுத்தியிருக்கிறது.

    எந்த புள்ளி விவரத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிற பா.ஜ.க.வினர், ஐ.நா. சபை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கைக்கு என்ன பதில் கூறப் போகிறது? மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெறுவதை நோக்கமாக கொண்ட ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க.வினர் மக்களின் உண்மையான வளர்ச்சி மீது அக்கறையில்லை என்பதையே ஐ.நா. சபையின் புள்ளி விவரம் சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய அவலநிலை நீடிக்குமேயானால் நாட்டு மக்களின் கடும் கோபத்திற்கு பா.ஜ.க. ஆட்சியாளர்கள் சந்திக்க நேரிடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×