search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    நாளை பொதுக்குழு கூடுகிறது- அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகிறார்?
    X

    நாளை பொதுக்குழு கூடுகிறது- அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகிறார்?

    • நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
    • அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை (23-ந்தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    இதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டு இருந்தனர்.

    பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக கடந்த 14-ந்தேதி தலைமை கழகத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

    அந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தை போல கட்சியை வழிநடத்த ஒற்றை தலைமை வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கட்சியில் பிரச்சினை ஏற்பட்டது. ஒற்றை தலைமை தொடர்பாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குரல் எழுப்பினார்கள்.

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நீடித்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வீடுகளில் அவர்களின் ஆதரவாளர்கள் குவிந்து வந்தனர். இதனால் கடந்த 9 நாட்களாக அ.தி.மு.க.வில் பரபரப்பு நிலவுகிறது.

    எடப்பாடி பழனிசாமி, ஓபன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இதில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். எனவே பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் பதவிக்கு கொண்டுவரும் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.

    இதைவிரும்பாத ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஏற்க மறுத்தனர். இதனால் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதை தடுக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முயற்சி மேற்கொண்டனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த மாவட்ட செயலாளர் பென்ஜமின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

    ஆனால் அதேநேரத்தில் பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி மறுக்கும்படி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆவடி போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆவடி போலீஸ் கமிஷனர் நிராகரித்து விட்டார்.

    இந்த நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பொதுக்குழு கூட்டம் நாளை (23-ந்தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கு கட்சியின் 68 ஆண்டுகால மூத்த உறுப்பினரான தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. எனவே புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    பொதுக்குழு தொடங்கியதும் முதலில் தற்காலிக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதன் பிறகு அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

    பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர யார் யார் ஆதரவு தருகிறீர்கள் என்று அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் தமிழ்மகன் உசேன் கேட்பார். ஆதரவு தெரிவிப்பவர்கள் கைகளை உயர்த்தி காண்பிக்க வேண்டும்.

    பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் பொதுச்செயலாளர் பதவியை கொண்டுவருவதற்கான சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும். பொதுச்செயலாளர் பதவிக்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுகிறார்.

    பொதுக்குழு கூட்டத்திலேயே அவரை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. அல்லது பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் மற்ற 23 தீர்மானங்களும் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.

    இதற்கிடையே நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×