search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக போலீசுக்கு புதிய சீருடை சின்னம்
    X

    கோப்பு படம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழக போலீசுக்கு புதிய சீருடை சின்னம்

    • டி.ஜி.பி.யின் சீருடை தோள் பட்டையில் ஐ.பி.எஸ். என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும்.
    • கூடுதல் டி.ஜி.பி. சீருடையிலும் இந்த அடையாளங்கள் உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் காவலர் முதல் டி.ஜி.பி. வரை போலீசாருக்கு ஒரே மாதிரியான காக்கி சீருடைகள் வழங்கப்பட்டு உள்ள போதிலும் அவரவர் அதிகாரத்துக்கு ஏற்ப சீருடையில் சின்னங்கள் இடம் பெற்றிருக்கும்.

    டி.ஜி.பி.யின் சீருடை தோள் பட்டையில் ஐ.பி.எஸ். என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும். அசோக சின்னம், வாள், சிறியதடி ஆகியவையும் இடம் பெற்றிருக்கும்.

    தொப்பியில் வெள்ளி ஜரிகை, ஆலிவ் இலை வடிவிலான ஐ.பி.எஸ். சின்னம் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும். இதே போன்று கூடுதல் டி.ஜி.பி. சீருடையிலும் இந்த அடையாளங்கள் உள்ளன.

    தமிழக காவல் துறை இன்ஸ்பெக்டரின் சீருடையில் 3 ஸ்டார்களும், சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் 2 ஸ்டார்களும் இடம் பெற்றிருக்கும். ஏட்டுவின் சீருடையில் 3 பட்டைகள் போடப்பட்டிருக்கும்.

    காவலர்கள் எந்த வகை பிரிவில் பணியாற்றுகிறார்கள் என்பதை குறிக்கும் வகையில் இதுபோன்ற அடையாளங்கள் இடம் பெற்றிருந்த போதிலும் தமிழக காவல் துறை என்பதை குறிப்பிட்டு எந்த சின்னமும் இருக்காது.

    இந்த நிலையில் "தமிழ்நாடு போலீஸ்" என்கிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட புதிய சீருடை சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இந்த புதிய சின்னத்தை காவலர் முதல் டி.ஜி.பி. வரை அனைவரும் அணிந்து கொள்வார்கள். கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆலோசனையின் முடிவிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    புதிய போலீஸ் சீருடை சின்னத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம், அசோக சின்னம், தேசிய கொடி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அதனுடன் காவல் என்ற வார்த்தைகள் தமிழில் இடம் பெற்றுள்ளது.

    தமிழகத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கு போலீசார், ரெயில்வே போலீசார், மகளிர் போலீசார், போக்கு வரத்து போலீசார் என சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் காவலர்கள் விரைவில் தங்களது சீருடையில் புதிய சின்னத்தை வைத்து தைத்து பயன்படுத்திக் கொள்ள உள்ளனர்.

    இதற்கான தொடக்க விழா விரைவில் நடைபெற உள்ளது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×