search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை உள்பட 2,800 மதுக்கடை பார்களுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: டெண்டர் 31-ந் தேதி வரை நிறுத்தி வைப்பு
    X

    சென்னை உள்பட 2,800 மதுக்கடை பார்களுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: டெண்டர் 31-ந் தேதி வரை நிறுத்தி வைப்பு

    • தமிழகம் முழுவதும் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் போட்டி போட்டுக்கொண்டு பார்களை ஏலம் எடுப்பதற்கு விண்ணப்பித்தனர்.
    • டாஸ்மாக் நிர்வாகம் கோர்ட்டில் ஆவணங்களை தாக்கல் செய்து விளக்கம் அளித்த பிறகுதான் முடிவாகும்.

    சென்னை:

    தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் பார்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பார்கள் நடத்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஏலம் விடப்படவில்லை. 2,800 கடைகளுக்கான பார்களை டெண்டர் விட கடந்த 7-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    ஏற்கனவே விடப்பட்டு நிறுத்தப்பட்ட கடைகளுக்கும், இதுவரையில் ஏலம் விடாமல் இருந்த கடைகளுக்கும் சேர்த்து இ.டெண்டர் விடப்பட்டது. இதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணி வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

    தமிழகம் முழுவதும் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் போட்டி போட்டுக்கொண்டு பார்களை ஏலம் எடுப்பதற்கு விண்ணப்பித்தனர். குறிப்பாக சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் 720 பார்கள் உள்ளன. இவற்றை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவுகிறது.

    இதற்கிடையில் மதுபான பார்கள் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. டெண்டரை இன்று இறுதி செய்து அறிவிக்கக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில் 31-ந் தேதி வரை பார் டெண்டர் குறித்த அறிவிப்பை வெளியிடக் கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனால் இன்று டெண்டர் இறுதி செய்யப்படாது. டாஸ்மாக் நிர்வாகம் கோர்ட்டில் இது தொடர்பாக ஆவணங்களை தாக்கல் செய்து விளக்கம் அளித்த பிறகுதான் முடிவாகும்.

    இதுகுறித்து தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறுகையில், 'பார்கள் டெண்டர் முறையாக நடத்தப்பட வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் நடைபெற வேண்டும். 2003 முதல் 2019 வரை என்ன நடைமுறை இருந்ததோ அதை பின்பற்றலாம். நேர்மையான முறையில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்.

    Next Story
    ×