search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சுருட்டிய தஞ்சை வாலிபர் கைது
    X

    சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சுருட்டிய தஞ்சை வாலிபர் கைது

    • வங்கி பண பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கியிருப்பது தெரிய வந்தது.
    • டெலிகிராம் மூலம் அறிமுகமான மும்பையை சேர்ந்த க்ளோன் என்ற நபருடன் இணைந்து பல்வேறு சதி திட்டங்களை தீட்டியுள்ளனர்.

    செந்துறை:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முகமது தன்வீர்(வயது 35). இவர் தற்போது அரியலூர் ஜெஜெ நகரில் வசித்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் பகுதி நேர வேலை தொடர்பாக குறுஞ்செய்தி வந்தது. இதை பார்த்து, அவர் அதில் உள்ள டெலிகிராம் குரூப்பை தொடர்பு கொண்டார். அப்போது, அதில் பேசிய நபர் தன்னிடம் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகள் கூறினார்.

    இதை நம்பி, முகமது தன்வீர் பல்வேறு டாஸ்க்களை முடிப்பதற்காக பல்வேறு தவணைகளாக ரூ.12 லட்சத்து 47 ஆயிரம் செலுத்தினார். ஆனால் அவருக்கு லாப தொகை எதுவும் வழங்கப்படவில்லை.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகமது தன்வீர் இது குறித்து தன்வீர் அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மர்ம கும்பல் இணையம் வழியாக இதுபோன்று பலரிடம் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இந்த கும்பல் கோடிக்கணக்கில் பணம் சுருட்டியுள்ளது. இதை தொடர்ந்து கொள்ளையர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகளில் இருந்த ரூ.78 லட்சத்து 54 ஆயிரத்து 56 யை போலீசார் முடக்கம் செய்தனர். வங்கி பண பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில் இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கியிருப்பது தெரிய வந்தது.

    அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிவனேசன் சுரேஷ்பாபு, சுரேஷ், ரஞ்சித் குமார் வசந்தி உள்ளிட்ட 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

    அப்போது தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், முஸ்லிம் தெருவில் பதுங்கி இருந்த மாலிக் (35). என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    மாலிக் தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் பகுதியில் ஆல்பா 3 ஐ இன்போ டெக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதில் போதிய லாபம் கிடைக்காததால், ஆன்லைனில் அதிகளவில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டார்.

    இதற்காக டெலிகிராம் மூலம் அறிமுகமான மும்பையை சேர்ந்த க்ளோன் என்ற நபருடன் இணைந்து பல்வேறு சதி திட்டங்களை தீட்டியுள்ளனர். இதற்காக கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதில் சிலரை வேலைக்கு சேர்த்தனர்.

    அவர்களை ஏமாற்றி பல்வேறு காரணங்கள் கூறி அவர்களுடைய பெயரில் நடப்பு வங்கி கணக்குகள் தொடங்கினர். மேலும் புதிய சிம் கார்டுகளை வாங்கி மோசடி பண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தி உள்ளனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மாலிக்கிடம் இருந்து ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்திய 4 செல்போன்கள், 15 சிம்கார்டுகள்,8 ஏ.டி.எம். கார்டுகள், ஒரு காசோலை புத்தகம், இருசக்கர வாகனம் மற்றும் ரூ.2,50,000 ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டுள்ள மும்பையை சேர்ந்து க்ளோன் உள்ளிட்ட சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×